புதுவையில் இருந்து கொச்சி, திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்படும் - நாராயணசாமி தகவல்


புதுவையில் இருந்து கொச்சி, திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்படும் - நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2018 5:00 AM IST (Updated: 19 Feb 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இருந்து கொச்சி, திருப்பதிக்கு படிப்படியாக விமான சேவை தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ஊழல் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வருகின்றன. நீரவ்மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் பணத்தை கொள்ளையடிக்க வங்கி அதிகாரிகள் உறுதுணையாக இருந்துள்ளனர். வங்கியில் பல தணிக்கைகள் உண்டு.

அதையும் மீறி இந்த ஊழல் நடந்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பிறர் மீது பழியை போடுவதை விட்டுவிட்டு முழுவிசாரணை நடத்தி இந்த மோசடிக்கு உண்மையான காரணம் யார்? என்பதை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 24-ந்தேதி வருவதாகத்தான் புதுவை அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன. 25-ந்தேதி வருகிறார் என்பது குறித்து கடிதம் ஏதும் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால்தான் நாங்கள் எதையும் உறுதியாக சொல்லமுடியும்.

காரைக்கால் விவசாயிகள் மாற்றுப் பயிர், பணப்பயிர் சாகுபடி செய்வது குறித்து தனியார் நிறுவனம் தங்களது தொழில்நுட்பங்களை தர முன்வந்துள்ளது. இதுதொடர்பாக மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். புதுவையில் இருந்து கொச்சி, திருப்பதிக்கு விமான சேவை தொடங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒடிசா ஏர் நிறுவனம் சென்னை மற்றும் சேலம் வழியாக பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்க முன்வந்துள்ளது. காரைக்காலிலும் பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு எடுத்து 12 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் அவர்கள் அதை தொடங்கவில்லை.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்கா போன்றவை அருகிலேயே உள்ளன. எனவே இங்கு விமான சேவை தொடங்கினால் சிறப்பாக இருக்கும். அங்கிருந்து மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்களை இயக்கலாம்.

2 தினங்களுக்கு முன்பு பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். பாப்ஸ்கோ நிறுவனத்தை லாபத்தில் இயங்க செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டத்தில் பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பேசும்போது, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார்.

பெண் எம்.எல்.ஏ.வான விஜயவேணி குறித்து அவர் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது என்பது அரசியல் நாகரீகம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சாமிநாதன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். அவரது பேச்சு மாநில தலைவராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் என்பதை காட்டுகிறது. தரம் தாழ்ந்து பேசுவது புதுவை அரசியலுக்கு ஒத்துப்போகாது. இதற்கான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகத்தின் ராஜினாமா, காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் கூட்டம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, குடும்பம் என்றால் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அதை நாங்களே பேசி சரிசெய்து கொள்வோம் என்று குறிப்பிட்டார். 

Next Story