வேளாண் எந்திர மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் லதா தகவல்


வேளாண் எந்திர மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் லதா தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2018 3:45 AM IST (Updated: 19 Feb 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ் 75 சதவீத மானியத்தில் வேளாண் எந்திர மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

தமிழகத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியினை பெருக்கும் வகையில் ‘நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல், கோடை உழவுப்பணிகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல், விவசாய குழுக்களுக்கு வேளாண் கருவிகள் மற்றும் எந்திரங்கள் வாடகை மையங்கள் அமைத்திட மானியம் வழங்குதல் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து அதிக லாபம் பெறும் வகையில், மதிப்புக்கூட்டும் எந்திர மையங்கள் அமைத்திட முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 200 தொகுப்புகளில் 75 சதவீதம் மானியத்தில் 50 தொகுப்புகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மானாவாரி தொகுப்புகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டு பண்ணைய திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அந்தந்த தொகுதிகளில் உள்ள பயிர்களுக்கான விளைப் பொருட்களை மதிப்புக்கூட்டும் வகையிலான எந்திர மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படவுள்ளது.

வேளாண் விளைப் பொருட்களை சுத்தப்படுத்தி தரம்பிரித்து விற்பனைக்கேற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்டப் பணிகளுக்கான எந்திரங்கள் வாங்குவதற்கும் மற்றும் அதற்குரிய பணி மூலதனம் ஆகியவை உள்ளிட்ட மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம், இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள 25 சதவீதத் தொகையினை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக்குழு செலுத்த வேண்டும். எனவே, இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற ஆர்வமுடைய உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் எந்திர மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை சிவகங்கை வேளாண்மை செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story