பிரதமர் நரேந்திர மோடி மைசூரு வருகை இன்று மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்


பிரதமர் நரேந்திர மோடி மைசூரு வருகை இன்று மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்
x
தினத்தந்தி 19 Feb 2018 4:30 AM IST (Updated: 19 Feb 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காகவும், மைசூருவில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மைசூருவை வந்தடைந்தார். இன்று(திங்கட்கிழமை) அவர் கோமதேஸ்வரர் கோவிலுக்கு சென்று மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்.

மைசூரு,

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் உள்ள விந்தியகிரி மலையில் கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமஸ்தகாபிஷேக விழா கடந்த 7-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மகாமஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொள்ளவும், மைசூருவில் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 11.10 மணி அளவில் கர்நாடக மாநிலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு முதல்- மந்திரி சித்தராமையா, மாவட்ட பொறுப்பு மந்திரி மகாதேவப்பா, மைசூரு மாவட்ட கலெக்டர் ரன்தீப் மற்றும் பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் நேற்று இரவு மைசூருவிலேயே தங்கினார். பிரதமரின் வருகையையொட்டி மைசூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் மைசூரு நகரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் வேறு பாதைகளில் மாற்றி விடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தங்கியிருந்த விடுதியை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், 100 மீட்டர் தொலைவுக்கு ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) காலையில் பிரதமர் மோடி மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சரவணபெலகோலாவில் கோமதேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கு மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு பாகுபலி சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு, சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஹாசன் மாவட்ட நிர்வாகம், பா.ஜனதாவினர், மகா மஸ்தகாபிஷேக விழா குழுவினர் ஆகியோரால் செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மைசூருவை வந்தடைகிறார். பின்னர் மைசூருவில் பெங்களூரு-மைசூரு இடையேயான இரட்டை ரெயில் பாதை சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மத்திய அரசின் வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் மாலையில் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். 

Next Story