கூடலூரில் இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
கூடலூரில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய ராணுவ வீரர், போலீஸ்காரர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தமபாளையம்,
கூடலூரை சேர்ந்தவர் இலக்கியா (வயது 25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 35 பவுன் நகையும், ரூ.2 லட்சமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இலக்கியாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சிவபாலனின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இலக்கியாவின் கணவர் சிவபாலன், மாமனார் ராமர் (56) மற்றும் உறவினர்கள் உதயராணி (47), பிரதீப் (27) ஆகிய 4 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேன்மொழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவபாலன் மத்தியபிரதேசத்தில் ராணுவ வீரராகவும், பிரதீப் போலீஸ்காரராகவும் இருந்து வருகிறார்கள்.
இதேபோன்று கம்பம் காளவாசல் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாரூக். இவருடைய மகள் ஜெசிமாகனி (26). இவருக்கும் சென்னையை சேர்ந்த ரகுமத்துல்லா மகன் ஷேக்பரீத் (35) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 125 பவுன் நகையும், ரூ.10 லட்சமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு ஜெசிமாகனியை ஷேக்பரீத்தின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவர் சென்னையில் இருந்து உத்தமபாளையம் வந்து அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஷேக்பரீத், இவருடைய தந்தை ரகுமத்துல்லா மற்றும் உறவினர்கள் ரகுமத்துல்லா (77), தமிமுன் அன்சாரி (40), இவருடைய மனைவி பாத்திமா (30), உறவினர் ஆயிஷா (38) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story