பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கட்டணம் பன்மடங்கு உயர்வு


பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கட்டணம் பன்மடங்கு உயர்வு
x
தினத்தந்தி 20 Feb 2018 5:00 AM IST (Updated: 20 Feb 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டதாலும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தாம்பரம்,

தமிழகம் முழுவதும் பொது சுகாதார பிரிவின் கீழ் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 12-10-2017 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட அரசாணை (நிலை) எண் 360-ன் படி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது.

அதன்படி பிறப்பு மற்றும் இறப்பு குறித்து கால தாமத பதிவு 21 தினங்களுக்கு மேல் 30 தினங்களுக்குள் கட்டணம் ரூ.2-ல் இருந்து ரூ.100 ஆகவும், 30 தினங்களுக்கு மேல் ஒரு வருடத்துக்குள் ரூ.5-ல் இருந்து ரூ.200 ஆகவும், ஒரு வருடத்துக்கு மேல் ரூ.10 இருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதேபோல், குழந்தையின் பெயர் பதிவு கட்டணம் ஒரு வருடத்துக்கு மேல் ரூ.5-ல் இருந்து ரூ.200 ஆகவும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் பதிவில்லா சான்றிதழ் பெற தேடுதல் கட்டணம் ஒரு வருடத்துக்கு ரூ.2-ல் இருந்து ரூ.100 ஆகவும், கூடுதலாக ஒவ்வொரு வருடத்துக்கும் ரூ.5-ல் இருந்து ரூ.100 ஆகவும், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழின் முதல் நகலுக்கு ரூ.5-ல் இருந்து ரூ.200 ஆகவும், கூடுதலாக பெறும் ஒவ்வொரு நகலுக்கும் ரூ.200-ம், பதிவில்லா சான்றிதழ் பெற ரூ.2-ல் இருந்து ரூ.100 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பலமடங்கு உயர்த்தப்பட்ட கட்டணங்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறுவதில் புதிதாக பல கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவந்து உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

1-1-2018-ல் முதல், தமிழகம் முழுவதும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் பணி பொது சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது. சி.ஆர்.எஸ். எனப்படும் பொதுபதிவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சான்றிதழ்கள் பெறுவதில் பல கட்டுப்பாடுகள் உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இணையதளத்தில் இந்த பதிவுகள் செய்யும்போது பேறுகாலம் மற்றும் குழந்தைகள் நலம் அடையாள எண் இருந்தால் தான் கம்ப்யூட்டரில் பதியும் நிலை உள்ளது.

இந்த அடையாள எண்ணை அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் நகர்புற சுகாதார நிலையங்களில், குழந்தை கருவில் இருக்கும்போதே ஆதார் எண்ணுடன் தெரிவித்து பெறவேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் இந்த அடையாள எண் இருந்தால் மட்டுமே பிறப்பு சான்றிதழ் பெறமுடியும்.

எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்கிற நிலை உள்ளது. இதுபற்றி இதுவரை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. இதனால் சான்றிதழ் பெற மக்கள் அலைக் கழிக்கப்படுகின்றனர்.

இணையதளத்தில் ஏற்படும் குளறுபடிகளை, சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டு அறை மூலமே சரி செய்ய முடியும் என்பதால் இதிலும் பல இன்னல்கள் ஏற்பட்டு சான்றிதழ்கள் பெறமுடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மிகச்சிறிய எழுத்துகளில் கம்ப்யூட்டரில் பிரிண்ட் ஆகி வருவதால் பெயர் கூட கண்ணுக்கு தெரியாத அளவில் உள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்ட நிலையில், அவற்றை பெறுவதில் ஏற்பட்டு உள்ள இந்த சிக்கல்களை நீக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story