கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மனு


கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மனு
x
தினத்தந்தி 20 Feb 2018 3:30 AM IST (Updated: 20 Feb 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தில், தாட்கோ திட்டம் மற்றும் கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.36 ஆயிரத்து 700 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பெண்கள் மனு அளிக்க வந்தனர். அவர்களில் சிலர் கையில் காலிக்குடங்களை எடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் வெங்கடாசலத்திடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், “எங்கள் வார்டில் சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 20 நாட்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லை. சந்தன மாரியம்மன் கோவில் கிணற்றை தூர்வாரி முறையாக குடிநீர் வழங்க வேண்டும். துர்க்கை அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றையும் சரிசெய்து கொடுக்க வேண்டும். மேலும் சாக்கடை கால்வாய் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியிருந்தனர்.

மேலும் இதுகுறித்து அந்த பெண்கள் கூறுகையில், “மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகில் தான் கருவேல்நாயக்கன்பட்டி அமைந்துள்ளது. கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரில் இருந்தே கருவேல்நாயக்கன்பட்டி ஊர் தொடங்குகிறது. ஆனாலும், எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுவதோடு, சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதிக்காக ஏங்க வேண்டியது உள்ளது.

எனவே, மக்களின் குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றனர். 

Next Story