கல்குவாரி ஏலத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் முறையிட்ட இளைஞர்கள்


கல்குவாரி ஏலத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் முறையிட்ட இளைஞர்கள்
x
தினத்தந்தி 20 Feb 2018 4:30 AM IST (Updated: 20 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, கல்குவாரி ஏலத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் இளைஞர்கள் மனு கொடுத்து முறையிட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 169 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தின் போது, கீழப்புலியூர் (தெற்கு) கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த சோலைமுத்து பணியில் இருக்கும் போது இறந்துவிட்டதால், அவரது மகன் ராஜதுரைக்கு கருணை அடிப்படையில் பெரம்பலூர் கோட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான ஆணையையும், வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த சர்தார்கான் மகன் ரியாஸ் அகமது என்பவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததால் முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் தலைமையில், தெரணி கிராம இளைஞர்கள் மனு கொடுத்தனர். அதில், கல்குவாரி ஏலம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, கல்குவாரி ஏலம் விடப்பட்டால் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு விவசாயம் உள்ளிட்டவை பாதிக்கக்கூடும். இயற்கை வளமும் அழிவுக்குள்ளாகும். எனவே கல்குவாரி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று கூறியிருந்தனர். மேலும் இது தொடர்பாக கலெக்டரிடம் முறையிட் டனர். அப்போது அரசு உத்தரவின் கீழ் தான் இந்த ஏலம் நடக்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் வருவாய் பெருகி சாலைவசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். மேலும் கோர்ட்டு உத்தரவு எதுவும் வந்தால் பின்னர் அதனை செயல்படுத்துவோம் என்று கலெக்டர் கூறினார்.

குன்னம் தாலுகா பென்னக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கமலம் (43) மற்றும் உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அப்போது நடக்க இயலாத பன்னீர்செல்வத்தின், 65 வயதுடைய தாய் அஞ்சலம்மாளை அவர்கள் தூக்கி கொண்டு வந்தனர். கமலம் அளித்த மனுவில், சட்டவிரோதமாக சாராயம் விற்றதாக எனது கணவர் மீது போலியாக வழக்குப் பதிவு செய்து மங்களமேடு போலீசார் கைது செய்தனர். தற்போது அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் ஏற்பாடு நடக்கிறது. அவர் இல்லையெனில் எங்களது குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

குன்னம் தாலுகா சிறுகுடல் பகுதியை சேர்ந்த மூதாட்டிகள் சிவபாக்கியம், சிவகங்கை, நல்லம்மாள், வள்ளியம்மை ஆகியோர் அளித்த மனுவில், எங்களது விரல்ரேகை சரியாக விழவில்லை என காரணம் காட்டி முதியோர் உதவித்தொகை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உதவித்தொகையை தர மறுக்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து தடையின்றி முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதற்கிடையே கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்திருந்த சிவபாக்கியத்துக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் தள்ளாடி நின்ற அவருக்கு, அங்கு பாதுகாப்புபணியில் இருந்த பெண் போலீஸ் ரெங்கநாயகி டீ வாங்கி கொடுத்து ஆசுவாசப்படுத்தி மனு கொடுப்பதற்கான வழிமுறைகளை எடுத்து கூறினார். இதனால் அங்கிருந்த மூதாட்டிகள் அந்த போலீசுக்கு நன்றி தெரிவித்தனர்.

குன்னம் தாலுகா பென்னக்கோணம் இளைஞர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைப்பது, தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரை அகற்றுவது உள்ளிட்ட அடிப்படை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இந்த கூட்டத்தில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

Next Story