சமூக பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றிய விழிப்புணர்வு அரங்குகளை மாணவர்கள் பார்வையிட்டனர்


சமூக பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றிய விழிப்புணர்வு அரங்குகளை மாணவர்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 20 Feb 2018 4:00 AM IST (Updated: 20 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது. இதையொட்டி சமூக பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி விளக்கி வைக்கப்பட்ட அரங்குகளை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் சமூகப்பணித்துறை இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் “சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்றங்களை முன்னெடுப்பது” பற்றிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மனோகரன் தலைமை தாங்கினார். மாணவி புவனேசுவரி வரவேற்றார். சமூகப்பணித்துறையின் துறைத்தலைவர் மகேஷ்வரி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார் கலந்து கொண்டு “காவலர்கள் பார்வையில் இன்றைய இளம்தலைமுறையினர்” என்கிற தலைப்பில் பேசினார்.

இதேபோல் பெரம்பலூர் நகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், வாகன விதிகளை இளைஞர்கள் எவ்வாறு பின்பற்றுகிறார்கள்? என்பது குறித்தும், வாகன விபத்துகளை தடுப்பது குறித்தும் எடுத்துரைத்தார். பேராசிரியை சிவப்பிரியா வாழ்த்தி பேசினார். தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்புக்கான சட்ட உரிமை குறித்த கருத்தரங்கம் நடந்தது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வக்கீல் வித்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் அம்மாபாளையம் அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராமர், பேராசிரியை அனிதா உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கருத்தரங்க நிகழ்ச்சிகள் இன்றும் (செவ்வாய்க் கிழமை), நாளையும் (புதன் கிழமை) நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கத்தையொட்டி சமூகப்பணித்துறை மாணவர்கள் சார்பில் கல்லூரியின் பிரதான நுழைவு வாயில் அருகே சமூக பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றிய அரங்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு அரங்குகள் ஏற்படுத்தப்பட்டன. பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது, பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பாக்கெட் சிப்ஸ், துரித உணவுகள் உள்ளிட்டவற்றை சாப்பிடும் போது உடலில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை விளக்கி இயற்கை உணவினை உண்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் உணவு பழக்க வழக்கம் குறித்து பட்டியலிட்டு வைத்திருந்தனர். கருத்தரங்கத்திற்கு வந்த மாணவ, மாணவிகள் இந்த விழிப்புணர்வு அரங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அப்போது சமூக பிரச்சினைகளை எதிர்கொள்ள தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவது குறித்து அரங்கிலிருந்த சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகள் விளக்கினர். முடிவில் மாணவர் சதீஷ் நன்றி கூறினார். 

Next Story