மாவட்ட செய்திகள்

குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாட்டமா? மேலும் ஒரு வீட்டில் ஒட்டப்பட்ட கருப்பு ஸ்டிக்கரால் பரபரப்பு + "||" + Will mobs kid kidnapped? And a home stick black sticker

குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாட்டமா? மேலும் ஒரு வீட்டில் ஒட்டப்பட்ட கருப்பு ஸ்டிக்கரால் பரபரப்பு

குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாட்டமா? மேலும் ஒரு வீட்டில் ஒட்டப்பட்ட கருப்பு ஸ்டிக்கரால் பரபரப்பு
குமரி மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாடி வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில், குளச்சலில் ஒரு வீட்டில் ஒட்டப்பட்ட கருப்பு ஸ்டிக்கரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருங்கல்,

குமரி மாவட்டத்தில் வெளி மாநிலத்தவர் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் வியாபார தலங்களில் தங்கியபடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுமட்டுமின்றி வீதி வீதியாக சென்று ஐஸ், பாப்கான் விற்பனையிலும் ஈடுபடுகின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் சில நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் வருகிறது.


இதுமட்டுமின்றி இவர்களுக்கு எந்தவித ஆதாரமுமின்றி வீடுகளை வாடகைக்கும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதை நெறிமுறை படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் அவர்களோடு வீட்டு உரிமையாளர்கள் ஒத்துழைக்க முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

இந்தநிலையில், தற்போது குமரி மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி செல்வதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கும்பலாக ஈடுபடுவதாகவும் தகவல்கள் பரவுகிறது.

உண்மையிலேயே குமரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தும் கும்பல் ஊடுருவி உள்ளதா? அல்லது வேண்டுமென்றே சமூக விரோதிகள் யாரேனும் இந்த மாதிரியான செய்திகளை பரப்பி வருகின்றனரா? என்பதை குமரி மாவட்ட காவல்துறை நிர்வாகம் கண்டுபிடித்து பொதுமக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையே குளச்சலில் மீண்டும் ஒரு வீட்டில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல், களிமார் அழகனார்கோட்டவிளையை சேர்ந்தவர் ரஜினி. இவரது மனைவி சுஜா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரஜினி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால், சுஜா இரவு நேரங்களில் அருகில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் தாயின் வீட்டுக்கு தூங்க சென்றார்.

பின்னர், நேற்று காலையில் தனது வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் நான்கு பகுதிகளிலும் ஜன்னல்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இதை பார்த்த சுஜா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குளச்சல் பகுதியில் ஏற்கனவே இரண்டு வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.