டெல்லியில் மர்ம மரணம் அடைந்த திருப்பூர் மருத்துவ மாணவரின் இறப்பு குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி


டெல்லியில் மர்ம மரணம் அடைந்த திருப்பூர் மருத்துவ மாணவரின் இறப்பு குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2018 11:00 PM GMT (Updated: 19 Feb 2018 8:28 PM GMT)

டெல்லியில் மர்ம மரணம் அடைந்த திருப்பூர் மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியின் நிறுவன தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மோகன் கந்தசாமியின் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி ஷெரீப் காலனியில் உள்ள கிட்ஸ் கிளப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பள்ளி சேர்மன் மோகன் கே.கார்த்திக் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் நிவேதிகா ஸ்ரீராம் வரவேற்று பேசினார். பள்ளி இயக்குனர் ரமேஷ், கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் சக்திவேல், சைமா தலைவர் வைகிங் ஈஸ்வரன், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் தபால் நிலைய சூப்பிரண்டு கோபிநாதன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மோகன் கந்தசாமியின் தபால் தலையை வெளியிட்டு பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாநகர வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய மோகன் கந்தசாமிக்கு தபால் தலை வெளியிட்டுள்ளது மிகுந்த வரவேற்கத்தக்கது. மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனால் இந்த சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். காலம் தாழ்த்தக்கூடாது. ஏற்றுமதிக்கு மிகுந்த ஊன்றுகோலாக டியூட்டி டிராபேக் இருந்து வந்தது. இந்த நிலையில் மத்திய அரசு இதன் சதவீதத்தை குறைத்துள்ளது.

இதை அரசு ரத்து செய்ய வேண்டும். டெல்லியில் மர்ம மரணம் அடைந்த திருப்பூர் மருத்துவ மாணவன் சரத்பிரபு மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். அதன் உண்மை நிலையை வெளியில் கொண்டுவரவேண்டும். தமிழகத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் இதை கட்டுப்படுத்த வேண்டும். கண்காணிப்பை அதிகரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்க வேண்டும்.

ஆந்திராவில் தமிழர்கள் 5 பேர் ஏரியில் விழுந்து இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் உள்ள உண்மை நிலவரங்களையும் வெளியில் கொண்டு வரவேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளை பற்றி கவலைப்படாமல், அவர்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவது போன்று அந்த மாநில முதல்-மந்திரி பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மத்திய மற்றும் கர்நாடக மாநில அரசுகள் இணைந்து தமிழ் மக்களை வஞ்சித்து வருகின்றனர். நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களை நிறைவேற்றாமல், அரசியல் ரீதியான கருத்துகள் அதிகம் பேசப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story