மாவட்ட செய்திகள்

கே.எஸ்.புட்டண்ணய்யா எம்.எல்.ஏ. உடலுக்கு சித்தராமையா நேரில் அஞ்சலி + "||" + ks puttannaiah MLA For the body Siddaramaiah is a tribute to him

கே.எஸ்.புட்டண்ணய்யா எம்.எல்.ஏ. உடலுக்கு சித்தராமையா நேரில் அஞ்சலி

கே.எஸ்.புட்டண்ணய்யா எம்.எல்.ஏ. உடலுக்கு சித்தராமையா நேரில் அஞ்சலி
மாரடைப்பால் உயிரிழந்த கே.எஸ்.புட்டண்ணய்யா எம்.எல்.ஏ. உடலுக்கு சித்தராமையா நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். கே.எஸ்.புட்டண்ணய்யாவின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.
மண்டியா,

மண்டியா மாவட்டம் மேல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.எஸ்.புட்டண்ணய்யா (வயது 68). இவரது சொந்த ஊர் ஹாசன் மாவட்டம் பாண்டவபுரா தாலுகா கயத்தனஹள்ளி கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் தனது மனைவியுடன் அவர் வசித்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது உடலுக்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள், மேல்கோட்டை தொகுதி மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பாண்டவபுராவில் உள்ள எம்.விசுவேஸ்வரய்யா மைதானத்தில் நேற்று வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு முதல்-மந்திரி சித்தராமையா நேற்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவிக்கு சித்தராமையா ஆறுதல் கூறினார்.

பின்னர் சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், கே.எஸ்.புட்டண்ணய்யா மண்டியா, மைசூரு மாவட்டங்கள் மட்டுமின்றி மாநில முழுவதும் உள்ள விவசாயிகளின் பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். மேலும் கரும்புக்கான ஆதரவு விலை கோரி விவசாயிகளுடன் போராட்டம் நடத்தியுள்ளார். விவசாயிகளின் நலனுக்காக போராடிய கே.எஸ்.புட்டண்ணய்யாவின் மறைவு பேரிழப்பாகும். கே.எஸ்.புட்டண்ணய்யாவை கவுரவப்படுத்தும் வகையில் பாண்டவபுராவில் அரசு சார்பில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்றார்.

அதேப் போல் கே.எஸ்.புட்டண்ணய்யாவின் உடலுக்கு மந்திரிகள் மகாதேவப்பா, தன்வீர்சேட், கீதா மகாதேவபிரசாத், மண்டியா தொகுதி எம்.பி. சி.எஸ்.புட்டராஜு, முன்னாள் மந்திரிகள் ஷோபா, சி.டி.ரவி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மரணமடைந்த புட்டண்ணய்யாவுக்கு மகன், மகள்கள் உள்ளனர். அவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். தங்களது தந்தை இறந்த தகவலை அறிந்து இந்தியாவுக்கு புறப்பட்டு உள்ளனர். அவர்கள் நாளை (புதன்கிழமை) சொந்த ஊர் திரும்புகிறார்கள். அவர்கள் வந்த பின்னர் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு புட்டண்ணய்யாவின் உடல் அவரது சொந்த ஊரான கயத்தனஹள்ளியில் நாளை மாலை அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி புட்டண்ணய்யாவின் உடல் அமரர் ஊர்தியில் மைசூருவில் உள்ள ஜே.எஸ்.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.புட்டண்ணய்யா கடந்த 1949-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி கயத்தனஹள்ளி கிராமத்தில் ஸ்ரீகண்டா கவுடா-சாரதம்மா தம்பதியின் மகனாக பிறந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்த புட்டண்ணய்யா கயத்தனஹள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் மைசூரு புனித பிலோமினாள் கல்லூரியில் பி.யூ.சி. படிப்பை முடித்து, டி.பானுமய்யா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். தனது வழிகாட்டியான எஸ்.டி.ஜெய்ராம் அறிவுரையின் பேரில் 1983-ம் ஆண்டு கர்நாடக விவசாயிகள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். பின்னர் பாண்டவபுரா தாலுகா மற்றும் மண்டியா மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் மைசூரு பிராந்திய விவசாயிகள் சங்க இணை செயலாளராக பதவி வகித்துள்ளார். அதேப் போல் கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும் இவர் பதவி வகித்தார்.

அதன் பின்னர் கடந்த 1994-ம் ஆண்டு பாண்டவபுரா தொகுதியில் விவசாயிகள் சார்பில் ஏற்படுத்தப்பட்ட கர்நாடக சர்வோதயா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மேல்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார்.