டயர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் இருந்து பணப்பலன்கள் பெற்றுத்தர வேண்டும் கலெக்டரிடம் மனு


டயர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் இருந்து பணப்பலன்கள் பெற்றுத்தர வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 Feb 2018 4:15 AM IST (Updated: 20 Feb 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில், மூடப்பட்ட டயர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் இருந்து பணப்பலன்களை பெற்றுத்தர வேண்டும் என்று கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறைதீர்வு நாள் கூட்டத்தில், கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், ராணிப்பேட்டை, ஆற்காடு பகுதியை சேர்ந்த சுமார் 40 தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் வாகனங்களுக்கு டயர், டியூப் தயாரிக்கும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வந்தது. அதில் 507 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தோம். தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், அதனால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலை காணப்படுகிறது என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் லாபகரமாக இயங்கும்போது வழங்கப்படாத ஊதியத்தை சேர்த்து தருவதாக கூறி கடந்த 1995-ம் ஆண்டு முதல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு தொழிற்சாலை திடீரென மூடப்பட்டது. தொழிற்சாலை நிர்வாகம் 3 ஆண்டுகள் வழங்காத ஊதியம், ஊக்கத்தொகை மற்றும் பணப்பலன்களுக்காக பிடித்தம் செய்த பணத்தை எங்களுக்கு இதுவரை வழங்கவில்லை. தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களில் 75 பேர் இறந்து விட்டனர்.

தொழிற்சாலை நிர்வாக தரப்பில் பேசி பணப்பலன் களை பெற்றுத் தருவதாக தொழிற்சாலை சங்க செயலாளர் உறுதி அளித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் நிர்வாகம் தலா ரூ.9 லட்சம் வழங்க வேண்டும்.

தொழிற்சாலை எங்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்புநிதி பணத்தை கேட்டு வருமான வைப்புநிதி அலுவலகத்திற்கு சென்றோம். நிர்வாகத்தினர் தொழிற்சாலை மூடுவதற்கு முன்பு 3 ஆண்டுகள் வருமான வைப்புநிதியை செலுத்தவில்லை. எனவே அதனை முதலில் செலுத்துங்கள். அதன் பின்னர் வருங்கால வைப்புநிதியை முழுமையாக தருவதாக கூறுகின்றனர். சரியான வேலை இல்லாத காரணத்தால் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி காணப்படுகிறோம். எனவே அனைத்து தொழிலாளர்களும் 3 ஆண்டுகளுக்கான வருங்கால வைப்புநிதியை செலுத்த இயலாது. ஆகையால், தொழிலாளர்களுக்கான பணப்பலன்கள் அனைத்தையும் பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

குட்டை, கிணறு, ஏரி மற்றும் பாலாற்று வெள்ளத்தில் சிக்கி பலியான வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் ராமன் வழங்கினார்.

இதில் பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பேபிஇந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story