விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:30 PM GMT (Updated: 19 Feb 2018 9:10 PM GMT)

விராலிமலை மெய்க்கண்ணுடையாளர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 12 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடத்த ஊர்பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி திருப்பணி வேலைகள் முடிந்து கும்பாபிஷேக பணி தொடங்கியது. கடந்த 17-ந்தேதி காலை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

கும்பாபிஷேகம்

தொடர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. பின்னர் நேற்று காலை நான்காம் யாக சாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சுமந்தவாறு கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் மெய்க்கண்ணுடையாள் சன்னதி விமான கலசம் மற்றும் ராஜகோபுரத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் கணேஷ், விராலிமலை தாசில்தார் செல்வ விநாயகம், அட்மா சேர்மன் பழனியாண்டி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில் செயல் அலுவலர் ராமராஜா, ஆலய மேற்பார்வையாளர் மாரிமுத்து, ஆலய திருப்பணிகுழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story