புதுச்சேரி வரும் பிரதமர் மோடியை ரங்கசாமி சந்திக்கிறார்


புதுச்சேரி வரும் பிரதமர் மோடியை ரங்கசாமி சந்திக்கிறார்
x
தினத்தந்தி 19 Feb 2018 11:00 PM GMT (Updated: 19 Feb 2018 9:14 PM GMT)

புதுவை வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசுகிறார்.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி வைக்க பாரதீய ஜனதா முயன்றது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை இழந்தது.

இதைத் தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் முதல்-அமைச்சரான நாராயணசாமி போட்டியிட்டார். அவருக்கு எதிராக அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் ஓம்சக்தி சேகருக்கு என்.ஆர்.காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அப்போதே என்.ஆர்.காங்கிரஸ் பாரதீய ஜனதா கூட்டணி ஏற்படும் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் புதுவை வந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை ரங்கசாமி தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சந்தித்து பேசினார்.

தற்போது பாரதீய ஜனதாவுடன் இணைந்து காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அவர் கூட்டணி அமைக்க திட்டமிருப்பதாக கூறப்படுகிறது. எனவே வருகிற 25-ந்தேதி புதுவை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ரங்கசாமி நேரம் கேட்டிருந்தார். அதன்படி பிரதமர் மோடியை சந்திக்க ரங்கசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story