பா.ஜனதாவினரின் கனவு பலிக்காது முதல்-மந்திரி சித்தராமையா கடும் தாக்கு


பா.ஜனதாவினரின் கனவு பலிக்காது முதல்-மந்திரி சித்தராமையா கடும் தாக்கு
x
தினத்தந்தி 19 Feb 2018 11:15 PM GMT (Updated: 19 Feb 2018 9:33 PM GMT)

யார் வந்து பிரசாரம் செய்தாலும் மக்கள் மயங்க மாட்டார்கள் என்றும், கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற பா.ஜனதாவினரின் கனவு பலிக்காது என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

மைசூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உலகப்புகழ் பெற்ற கோமதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மகா மஸ்தகாபிஷேக விழா தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் வைத்து அவரை, முதல்-மந்திரி சித்தராமையா, மாவட்ட பொறுப்பு மந்திரி மகாதேவப்பா, மாவட்ட கலெக்டர் ரன்தீப் உள்பட பலர் வரவேற்றனர். மேலும் விமான நிலையத்திற்கு வெளியில் திரண்டிருந்த பா.ஜனதா தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மைசூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மைசூருவுக்கு வந்திருந்த முதல்-மந்திரி சித்தராமையா, மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். இந்த நிலையில் நேற்று காலையில் முதல்-மந்திரி சித்தராமையா தனது வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக மைசூருவுக்கு வந்துள்ளார். இந்த திட்டங்களிலும் மாநில அரசின் பங்கும் உள்ளது. அரசு முறைப்படி, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் நானும் கலந்து கொள்வேன்.

பா.ஜனதாவினர் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நான் மேற்கொண்ட ஆய்வில் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், ராமநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், பாகல்கோட்டை, சித்ரதுர்கா, பல்லாரி ஆகிய மாவட்டங்களில் பா.ஜனதா அலை வீசவில்லை. அதனால் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற பா.ஜனதாவினரின் கனவு பலிக்காது. பா.ஜனதாவுக்காக யார் வந்து பிரசாரம் செய்தாலும் மக்கள் மயங்க மாட்டார்கள்.

மண்டியா மாவட்டம் மேல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், விவசாய சங்க தலைவருமான புட்டணய்யா எனக்கு நெருக்கமான நண்பர். அவரது மறைவு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. நான் ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன். அந்த துக்கம் என்னை பாதித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு சீக்கிரமாக அவர் எங்களை விட்டு பிரிவார் என்று நான் நினைக்கவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடைய நான் ஆண்டவனை வேண்டுகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

இதையடுத்து அவர் காரில் புறப்பட்டு, மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா கேத்தனஹள்ளி கிராமத்தில் உள்ள புட்டணய்யாவின் வீட்டிற்கு சென்றார்.

Next Story