பிரதமர் மோடி கடும் தாக்கு ‘தினம் ஒரு ஊழல் வெளிவந்து கொண்டு இருக்கிறது’


பிரதமர் மோடி கடும் தாக்கு ‘தினம் ஒரு ஊழல் வெளிவந்து கொண்டு இருக்கிறது’
x
தினத்தந்தி 19 Feb 2018 11:45 PM GMT (Updated: 19 Feb 2018 9:50 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வந்தார்.

மைசூரு,

மைசூரு டவுன் ரேஸ்கோர்ஸ் அருகில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். நேற்று காலையில் அவர் அந்த ஓட்டலிலேயே பா.ஜனதா பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் மதியம் 12 மணி வரை நீடித்தது. பின்னர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சரவணபெலகோலாவுக்கு ஹெலிகாப்டரில் சென்று மகாமஸ்தகாபிஷேக விழாவில் பங்கேற்றார். அதையடுத்து அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3.30 மணியளவில் மைசூரு வந்தடைந்தார்.

பின்னர் அவர் மைசூரு ரெயில் நிலையத்தில் வைத்து நடந்த விழாவில் மைசூரு-பெங்களூரு இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதையில் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். மைசூரு-உதய்பூர் இடையிலான புதிய ரெயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதுமட்டுமல்லாமல் மைசூரு நாகனஹள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சேட்டிலைட் ரெயில் நிலையத்தையும், பிருந்தாவன் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியையும் திறந்து வைத்தார். அதையடுத்து மைசூரு-பெங்களூரு இடையே ரூ.6,400 கோடியில் அமைக்கப்பட உள்ள 8 வழிச்சாலைப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ரெயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பிறகு அங்கு குவிந்திருந்த மக்களிடம் கைகுலுக்கினார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி சித்தராமையா, ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல், மத்திய மந்திரிகள் அனந்தகுமார், சதானந்தகவுடா, மாவட்ட பொறுப்பு மந்திரிகள் மகாதேவப்பா, ஆர்.வி.தேஷ்பாண்டே, பிரதாப் சிம்ஹா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி கார் மூலம் மைசூரு மகாராஜா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.

பின்னர் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழா மேடைக்கு வந்த அவரை மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா சால்வை அணிவித்தும், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பு சார்பில் 3 கிலோ எடை கொண்ட வெள்ளியினால் ஆன விநாயகர் சிலையை நினைவுப்பரிசாக கொடுத்தும் வரவேற்றார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மைசூரு தலைப்பாகை அணிவித்து, சந்தன மாலையும் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி கன்னடத்தில் பேசி தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் கன்னடத்தில் மக்களைப் பார்த்து வணக்கம் என்று கூறினார். மேலும் கன்னடத்திலேயே பேசி சாமுண்டீசுவரி அம்மனுக்கு வணக்கம் செலுத்தினார். அதையடுத்து மைசூரு மன்னர்கள், விஷ்வேஸ்வரய்யா, குவெம்பு போன்றவர்களையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு கன்னடத்திலேயே வணக்கம் செலுத்தினார்.

இதுமட்டுமல்லாமல் மைசூரு தசரா விழா, மைசூரு மல்லிகைப்பூ, சந்தனம், மைசூரு பட்டுப்புடவை, மைசூரு பூங்கா மற்றும் மைசூருவின் பெருமைகளை கன்னடத்திலேயே எடுத்துக்கூறினார். இதைக்கேட்டு அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது கூறியதாவது:-

“நான் மைசூருவில் ரெயில் நிலையத்தை திறந்து வைத்தது உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்துள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. மக்களுக்கான மகத்தான நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். இது ஏழை, எளிய மக்களுக்கு அனுகூலமாக இருக்கும்.

ரெயில்வே துறை இன்னும் நவீன முறையில் சீரமைக்கப்பட வேண்டி உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏழைகள் எளிதில் பயணம் செய்யக்கூடிய வகையில் ரெயில்கள் இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி மற்றும் விவசாயத்தில் நாம் இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. இன்னும் 2 முதல் 3 மடங்கு நாம் வளர்ச்சி அடைய வேண்டி இருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் ரெயில்வே துறையில் எதிர்பாராத அளவுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இருந்த காங்கிரஸ் அரசு, ரெயில்வே பட்ஜெட்டை தனியாக அறிவித்து மக்களின் கண்களில் மண்ணை தூவிக் கொண்டு இருந்தது. அவர்கள் அறிவித்த எந்த திட்டங்களும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதை அந்த நேரத்தில் எதிர்த்து கேட்கவும் யாரும் இல்லை.

1960-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ரெயில் திட்டங்களே இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. ரூ.9 லட்சம் கோடி அளவிலான 1,500 ரெயில்வே திட்டங்கள் முடங்கி உள்ளன. அவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தற்போது தொடங்கப்பட்டுள்ள மைசூரு-உதய்பூர் ரெயில் சேவையால் கர்நாடக மக்களுக்கு 5 மாநிலங்களின் தொடர்பு கிடைக்கும். மைசூருவில் இருந்து ராஜஸ்தானுக்கு நேரடியாக செல்லலாம். இதன்மூலம் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மைசூருவில் சுற்றுலா மேம்பட்டால் அதை சார்ந்துள்ள அனைத்து தொழில்களும் முன்னேற்றம் அடையும். வியாபாரிகளும் முன்னேற்றம் அடைவார்கள்.

தற்போது கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் ஊழல் ஆட்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய, புதிய வகையில் ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனால் மாநில அரசு சார்பில் கொடுக்கப்படும் இலவசங்களை மக்களே தூக்கி எறியுங்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வெற்றிபெறச் செய்து அதிகாரம் கொடுங்கள்.

இது 10 சதவீத கமிஷன் ஆட்சி ஆகும். எனக்கு கர்நாடக மக்களின் கோபம் புரிகிறது. கர்நாடக அரசு மக்களிடம் இருந்து கமிஷனை எதிர்பார்க்கிறது. இல்லை என்றால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு ஒழுங்கற்ற ஆட்சியை எதிர்பார்க்கிறது. கர்நாடகத்தில் நேர்மையான மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட ஆட்சி மட்டுமே தேவை. கமிஷன் ஆட்சி அல்ல.

நான் கடந்த 4-ந் தேதி பெங்களூருவுக்கு வந்தபோது குறிப்பிட்டேன் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று. அதாவது அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்து, அவர்கள் வீட்டிற்கு செல்லும் நாள் நெருங்கி விட்டது.

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான ஆட்சி நேராக சென்று கொண்டிருக்கும் பாதையில் திடீரென ஏற்பட்ட பெரிய மேடு போன்று உள்ளது. அதனால்தான் கர்நாடக மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிது, புதிதாக ஊழல்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் நடந்து வருகின்றன. சித்தராமையா தலைமையிலான மந்திரி சபையில் அங்கம் வகித்து வரும் மந்திரிகளே ஊழல்களில் ஈடுபடுகிறார்கள். மேலும் அதிகாரிகளும் அரசு திட்டங்களில் ஊழல் செய்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் முதல்-மந்திரி சித்தராமையாவும், காங்கிரசாரும் தொடர்ந்து பொய் மேல், பொய் கூறி வருகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்களை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்கும் நாள் நெருங்கிவிட்டது.

காங்கிரசார் என்னதான் பொய் மேல், பொய் சொல்லி வந்தாலும், அதையே திரும்ப, திரும்ப கூறினாலும், அது உண்மையாகி விடாது. மக்கள் அவர்களையும், அவர்கள் கூறும் பொய்களையும் நம்ப மாட்டார்கள். அவர்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். காங்கிரசார் வீடுகளில் கத்தை, கத்தையாக பணம் உள்ளது.

காங்கிரசார் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டாம். மக்கள் பணத்தை காங்கிரசார் கொள்ளையடிப்பதற்கு பா.ஜனதாவினர் விடுவதில்லை. மத்திய அரசு வழங்கிய நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிரதமரின் முத்ரா திட்டத்தின் மூலம் மைசூருவில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.” இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த விவசாய சங்க தலைவர் புட்டண்ணய்யா எம்.எல்.ஏ.வை நினைவுகூர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார். பின்னர் மாலை 5 மணியளவில் அவர் கார் மூலம் மகாராஜா கல்லூரியில் இருந்து மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தார். அதையடுத்து அங்கிருந்து தனி விமானம் மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த மாநாட்டில் மாநில தலைவர் எடியூரப்பா உள்பட பா.ஜனதா முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் குவிந்திருந்தனர். பிரதமரின் வருகையையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story