மாவட்ட செய்திகள்

வண்டலூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் மோதல் + "||" + In engineering college Confrontation with students

வண்டலூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் மோதல்

வண்டலூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் மோதல்
என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு இரும்பு கம்பி அடி விழுந்தது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வண்டலூர்,

சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் பி.எஸ்.அப்துர் ரஹமான் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் கிரசென்ட் என்ஜினீயரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சையத் சல்மான் (வயது 20) 3-ம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார்.


இதே கல்லூரியில் கொடுங்கையூரை சேர்ந்த அம்ரேஷ் (19), நவீத் அகமது (20) ஆகியோர் 2-ம் ஆண்டு பி.இ. படித்து வருகின்றனர். கடந்த 16-ந் தேதி சையத் சல்மானுக்கும், அம்ரேஷ், நவீத் அகமது ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மாணவர்கள் இடையே அடிதடி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இருவரையும் சக மாணவர்கள் சமரசம் செய்துவைத்தனர்.

இதனையடுத்து விடுமுறை நாட்கள் முடிந்து நேற்று இருதரப்பினரும் கல்லூரிக்கு வந்தனர். வகுப்புகள் தொடங்கிய சில மணி நேரத்தில் கல்லூரி வளாகத்தில் நடந்துசென்ற சையத் சல்மானை, அம்ரேஷ், நவீத்அகமது ஆகிய இருவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் காயம் அடைந்த சையத் சல்மானை சக மாணவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவர்கள் மோதல் குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் மாணவர்கள் இடையே அடிதடி ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது.

இதுகுறித்து காயம் அடைந்த சையத் சல்மான் ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அம்ரேஷ், நவீத் அகமது ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் கிரசென்ட் கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.