தேர்வு சமயத்தில் கைகொடுக்கும் ‘நேர நிர்வாகம்’


தேர்வு சமயத்தில் கைகொடுக்கும் ‘நேர நிர்வாகம்’
x
தினத்தந்தி 20 Feb 2018 7:56 AM GMT (Updated: 20 Feb 2018 7:56 AM GMT)

தேர்வு நேரத்தில் திட்டமிடுதலும், நேர நிர்வாகமும் இன்னும் சிறப்பாக இருந்தால் வெற்றி எளிதில் வசப்படும்.

வெற்றிக்கான முதல் படி தோல்வியல்ல, ‘நேர நிர்வாகம்’தான்! எந்தப் பணிக்கும் திட்டமிட்டு அதற்கான நேரத்தை ஒதுக்கி உழைப்பதுதான் வெற்றியை எளிதாக்கும். கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து திட்டமிட்டு செயல்பட்டு வருபவர்களுக்கு இப்போது எதுவும் சிரமமாக தெரிவதில்லை. தேர்வு நேரத்தில் திட்டமிடுதலும், நேர நிர்வாகமும் இன்னும் சிறப்பாக இருந்தால் வெற்றி எளிதில் வசப்படும். தேர்வு சமயத்திற்கான நேர நிர்வாக டிப்ஸ் இதோ...

* பள்ளி நேரம் தவிர்த்து, மாலையில் சுமார் 6 மணி நேரமும், காலையில் சுமார் 3 மணி நேரமும் மாணவர் படிப்பதற்கான நேரமாக இருக்கிறது. இந்த பொன்னான நேரத்தை நீங்கள் எப்படி திட்டமிட்டு பயன்படுத்தி இருக்கிறீர்களோ? அதுவே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறது. புதிதாக இனி எந்தப் பாடத்தையும் மனப்பாடம் செய்யாமல் ஏற்கனவே படித்த பாடங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரவும், எழுதி பயிற்சி பெறவும் பயன்படுத்தி, இந்த நேர நிர்வாக யுத்தியை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

* மாலை பள்ளி நேரம் முடிந்த பிறகு தூங்கச் செல்லும் வரையில் கிடைக்கும் 6 மணி நேரத்தில் சுமார் 4 மணி நேரத்திற்கு குறையாமல் படிப்பதற்குப் பயன்படுத்திய மாணவர்கள் சிறப்பாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தேர்வு நெருங்கிவிட்டதால் இனி சுமார் 5 மணி நேரத்தையாவது படிக்கப் பயன்படுத்த வேண்டும். இதற்கு முன்பு ஒரு பாடத்திற்கு சுமார் 40 நிமிட நேரங்களை ஒதுக்கிப் படிக்க முடிந்திருக்கும். இந்த நேரத்தை நீங்கள் சரியாக ஒதுக்கிப் படித்திருந்தால், தேர்வு சமயமான இந்த நேரத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் நீங்கள் 20 நிமிட நேரத்தை ஒதுக்கி திருப்புதல் நடத்தினாலே போதுமானது. மீதி 20 நிமிட நேரத்தை எழுதிப் பார்த்தல், படம் வரைதல் போன்ற பயிற்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

* ஒவ்வொரு 40 நிமிட பயிற்சிக்குப் பின்னர் 10 நிமிடங்கள் ஓய்வாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது அரட்டையடிக்கலாம், காபி குடிக்கலாம், எழுந்து உலாவிவிட்டு வந்து அமர்ந்து கொள்ளலாம்.

* நன்கு படித்த பாடங்களுக்கு சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. அடிக்குறிப்புகள் மற்றும் முக்கிய வார்த்தைகளை நினைவில் வைத்திருந்தால் உடனடியாக பாடங்களை புரிந்து கொண்டு திருப்புதல் செய்துவிடலாம். இதற்கு அதிகபட்சம் 2 நிமிடங்கள் போதுமானது.

* இனி, குறைந்த காலமே இருப்பதால் விளையாட்டிற்கு ஓய்வு கொடுக்கலாம். இன்டர்நெட், சமூக வலைத்தளங்களில் உலவுவதையும் தவிர்த்துவிடலாம். முடிந்தால் செல்போனை அணைத்து வைத்து விடுங்கள். டி.வி. பார்க்கும் நேரத்தையும் குறைத்துக் கொள்ளலாம். குளித்தல், தயாராதல் உள்ளிட்ட அன்றாட பணிகளையும் தாமதமின்றி முடித்துப் பழகுங்கள்.

* பயண நேரத்தையும் படிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளி வாகனங்கள், வீதி வலம் வந்து பள்ளியை அடையும் நேரத்தில் பல பாடங்களை படித்து முடித்துவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். துண்டு காகிதத்தில் குறிப்பெடுத்துக் கொண்டால் எங்கு சென்றாலும் நினைவுபடுத்திப் படிக்கலாம்.

* செல்போனை தேர்வுக் காலம் வரை பொழுதுபோக்க பயன்படுத்தாமல், நேர நிர்வாகத்திற்கான சிறந்த கருவியாக பயன்படுத்துங்கள். அதில் உள்ள காலண்டர் வசதியை மணிக் கணக்காக பிரித்து பாடங்களை அட்டவணையிடுங்கள். 

* நேரத்துளிகளை அளவிடும் ரன்னிங் கடிகாரம், ஸ்நூஸ் வசதியைப் பயன்படுத்தி ஒவ்வொரு மணித்துணிகளையும் வீணாக்காமல் பயன்படுத்துங்கள். 

* இருவராக அல்லது குழுவாக இணைந்து கொண்டு பாடங்களை போட்டியிட்டு படிப்பதையும், வாய்விட்டுச் சொல்லி புரிந்து கொள்வதுமாக படித்தால், வேகமாக படிக்க முடியும். மறந்து போன வி‌ஷயங்களை மற்றவர்கள் நினைவூட்டுவது, நாம் புத்தகத்தில் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்திக் கொடுக்கும். தேர்வு அறையில் எளிதாக நினைவுக்கு வந்து கைகொடுக்கும்.

* ஒரு தேர்வுக்கும், மறு தேர்வுக்கும் இடைப்பட்ட காலத்தை திட்டமிடுங்கள். குறைந்த இடைவெளி கொண்ட பாடங்களுக்கு இப்போதிருந்தே கூடுதல் நேரத்தை ஒதுக்கி படியுங்கள்.

தேர்வு அறையில்...

தேர்வு அறையில் கடைப்பிடிக்க வேண்டிய நேர நிர்வாக முறைகள்...

* நன்கு விடை தெரிந்த கேள்விகளை தேர்வு செய்து முதலில் விடையளிக்கத் தொடங்குங்கள். சிறு வினாவுக்கு, சில நிமிடங்களிலும், குறுவினாவுக்கு குறுகிய காலத்திலும் பதிலளிக்கப் பழகுங்கள். விரிவான விடையளிக்க வேண்டிய வினாக்களுக்கு போதிய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு இதற்கான நேர மதிப்பீட்டை செய்து பாருங்கள்.

* ஒரு மதிப்பெண் வினாக்கள், இலக்கண வினாக்கள், இடைவெளியை நிரப்புதல், படித்துப் பார்த்து விடை கண்டுபிடித்தல், கிராப் வரைதல் போன்றவற்றில் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதால், இவற்றை முதலில் தேர்வு செய்து விடையளித்துவிடலாம். இதில் சேமிக்கும் நேரம் யோசித்து விடையளிக்க வேண்டிய பதில்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

* உதாரணமாக கணிதப் பாடத்தை எடுத்துக் கொண்டால் 3 மணி நேரம் (180 நிமிடங்களில்) 30 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. இவற்றில் முதல் இரு பிரிவுகளில் இடம் பெறும் எளிமையான வினாக்களுக்கு தலா 2 நிமிடங்களில் பதிலளிக்க முடியும். இவற்றுக்கு தலா 20 நிமிடம் வீதம் 40 நிமிடத்தை பயன்படுத்தலாம். அடுத்த இரு பிரிவுக்கும் கொஞ்சம் விரிவாகவும், மிக விரிவாகவும் பதிலளிக்க வேண்டியிருக்கும். ஆனால் விரிவான வினாக்களுக்கு குறைந்த எண்ணிக்கையில், நிறைய பதிலளிக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் 5 மதிப்பெண் வினாக்களுக்கு அதிக எண்ணிக்கையில் பதிலளிக்க வேண்டியிருப்பதால் விரிவான வினாக்களுக்கு ஆகும் நேரம் இதற்கும் தேவைப்படும். எனவே இவற்றுக்கும் சராசரியாக தலா 50 நிமிடங்களை ஒதுக்கலாம். மீதியுள்ள நேரத்தை திருப்புதலுக் கும், விடையை சரி பார்ப்பதற்கும், நேரத்தை குடிக்கும் வினாக்களுக்கும் செலவழிக்கலாம்.

* இவ்விதமாக ஒவ்வொரு தேர்வுக்கும் வினாக்களின் எண்ணிக்கையையும், நேரத்தையும் கணக்கிட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் எவ்வளவு நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள். அதற்கேற்ப பதிலளித்து பயிற்சி பெறுங்கள். இப்படி திட்டமிட்டு செயல்பட்டால் தேர்வறையில் நேரம் போதவில்லை என்ற குறையை களைந்து வெற்றி பெறலாம். மதிப்பெண்களை குவிக்கலாம்!

Next Story