மருத்துவ வசதிகள் கொண்ட ‘ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸ்’
‘ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்’கள் தயாரிக்கப்பட்டு மனிதப் பயன்பாட்டுக்கு விரைவில் வரவிருக்கின்றன.
இது ஸ்மார்ட் கருவிகளின் காலம். மனித வாழ்க்கை நவீனமடைவதின் எல்லை தொடர்ந்து விரிந்துகொண்டே செல்லும் இந்தக் காலத்தில், சாதாரணத் திறன்கள் கொண்ட மனிதர்கள் ‘போர்’ அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். மாறாக, பிரத்தியேகத் திறன்கள் கொண்ட சூப்பர்மேன்களையே உலகம் விரும்புகிறது.
விளைவு, காலம் காலமாக மனிதர்கள் மேற்கொண்டு வந்த பல சராசரியான தினசரி நிகழ்வுகள் அதிவேகமாக ‘அப்கிரேடு’ ஆகி வருவதைக் காண முடிகிறது. உதாரணமாக, வயது மற்றும் நோய்கள் காரணமாக பார்வைக் கோளாறு உள்ள மனிதனின் பார்வைத் திறனை பலமடங்கு மேம்படுத்தி, 20/20 பார்வைத் திறனை ஏற்படுத்தவல்ல ‘ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்’கள் தயாரிக்கப்பட்டு மனிதப் பயன்பாட்டுக்கு விரைவில் வரவிருக்கின்றன.
அத்தகைய ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்களில் பார்வைத் திறனோடு நோய் கண்டறிதல், ரத்த அழுத்தத்தைக் கண்டறிதல் உள்ளிட்ட பல மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள். ஆனால், அத்தகைய காண்டாக்ட் லென்ஸ்கள் மிகவும் அதிக விலை கொண்டதாகவும், கண்களில் பொருத்த முடியாத அளவுக்கு மிகவும் பெரியதாகவும், சில சமயங்களில் பயன்பாட்டாளரின் பார்வைத் திறனை பாதிப்பது அல்லது காயங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல ஆபத்துகளைக் கொண்டதாகவுமே இதுவரை இருந்து வருகிறது.
உலகில் முதல் முறையாக, தென்கொரியாவிலுள்ள உல்சான் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி நிறுவனம் மற்றும் சங்க்யூன்க்வான் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கண்ணீரில் உள்ள குளுக்கோஸ் அளவுகளைக் கண்காணிக்கும் மிருதுவான மற்றும் பயன்பாட்டாளருக்கு உதவிகரமான ஒரு அதிநவீன ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
இதனை உருவாக்க, குளுக்கோஸ் சென்சர்கள், ஒயர்லெஸ் மின்ஆற்றல் சர்கிட் மற்றும் டிஸ்ப்ளே பிக்செல் (glucose sensors, wireless power transfer circuits, and display pixels) ஆகிய மூன்று முக்கிய பாகங்களை வளையும் தன்மைகொண்ட, கண்ணாடி போன்ற நானோ அமைப்பு ஒன்றில் ஆய்வாளர்கள் பொருத்தியுள்ளார்கள்.
இந்த காண்டாக்ட் லென்ஸில் உள்ள டிஸ்ப்ளே பிக்செல்களே கண்ணீரில் உள்ள குளுக்கோஸின் அளவுகளை நிகழ்நேரத்தில் கண்டறிந்து விடுகின்றன. இதனால் குளுக்கோஸ் அளவுகளைக் கண்டறியும் பிரத்தியேக கருவி ஒன்றின் அவசியம் இல்லை. மாறாக, குளுக்கோஸ் தொடர்பான தகவலை எல்.ஈ.டி பிக்செல் ஒன்று காட்டிவிடுகிறது.
ஆக, கண்ணீரில் உள்ள குளுக்கோஸ் அளவுகள் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது ஸ்மார்ட் காண்டாக்ட் லென்சில் உள்ள எல்.ஈ.டி பிக்செல் செயலிழந்து போவதன் மூலமாக அணிந்திருப்பவரை குளுக்கோஸ் அளவு குறித்து எச்சரிக்கை செய்யும் என்று கூறப்படுகிறது.
இதுவரை, ஒரு முயலின் கண்களில் பொருத்தப்பட்டு, அந்த முயலின் கண்ணீரில் உள்ள குளுக்கோஸ் அளவுகளை ஒயர்லஸ் முறையில் வெற்றிகரமாக கண்காணித்து அது தொடர்பான மருத்துவத் தகவல்களையும் இந்த ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் பதிவு செய்துள்ளது. விரைவில், இதே ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ், மனிதர்களின் குளுக்கோஸ் அளவுகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும் என்கின்றனர் இதனை உருவாக்கியுள்ள தென்கொரிய விஞ்ஞானிகள்.
நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய இந்த ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் நீரிழிவு ஏற்படும் முன்னரே அதனைக் கண்டறிந்து சொல்லக்கூடிய திறன்பெற்றது என்பதால் நீரிழிவு நோய் வருமுன் காக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது. இத்தகைய ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் வருங்காலத்தில் மிக முக்கியமான மற்றும் ஒரு சராசரி மருத்துவக் கருவியாக மாறி, மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை தாங்களே பராமரித்து பாதுகாத்துக்கொள்ள உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மிக முக்கியமாக, குளுக்கோஸ் அளவுகள் மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம், உடல் வெப்பம், அல்லது கொலஸ்டிரால் உள்ளிட்ட மனித உடலின் நோய்க்காட்டிகள் பலவற்றின் அளவுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க இந்த ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் உதவும் என்றும் கூறப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story