அதிநவீன மின்சார ரெயில் சேவை தொடக்கம்


அதிநவீன மின்சார ரெயில் சேவை தொடக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2018 12:30 AM GMT (Updated: 20 Feb 2018 7:36 PM GMT)

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே அதிநவீன வசதிகளை கொண்ட மின்சார ரெயில் சேவை தொடங்கியது. இதில் மக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

தாம்பரம்,

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

இந்த நிலையில், பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் மும்முனை மின்சார ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தயார் செய்யும் தொழிற்சாலையில் புதிய ரெயிலுக்கான 12 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

அந்த பணிகள் முடிந்து அந்த பெட்டிகள் அனைத்தும் தாம்பரம் ரெயில் நிலைய பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு கடந்த வாரம் மும்முனை மின்சார ரெயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து, பயணிகளுக்கான மும்முனை மின்சார ரெயில் சேவை நேற்று தொடங்கியது.

அதன்படி இந்த மின்சார ரெயில் நேற்று காலை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரெயில் நிலையத்துக்கு சென்றது. அதன் பின்னர் இந்த ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்டு சென்றது.

தினமும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 6 முறை இயக்கப்படும் இந்த மும்முனை மின்சார ரெயில், சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் 3 முறை இயக்கப்படும்.

இந்த மின்சார ரெயில் எண்ணற்ற அதிநவீன வசதிகளை கொண்டு உள்ளன. இந்த ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் துரு பிடிக்காத இரும்பினால் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ரெயில் பெட்டிகளிலும் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரெயிலின் 12 பெட்டிகளில் மொத்தம் 1,168 இருக்கைகள் உள்ளன. இது தவிர ரெயிலில் நின்று கொண்டே 4 ஆயிரத்து 852 பேர் பயணம் செய்யலாம். கூட்ட நெரிசல் இருந்தாலும் பயணிகளுக்கு போதுமான காற்றோட்டம் இருக்கும் வகையில் நவீன கருவிகளுடன் ரெயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

இந்த ரெயிலின் இயக்கத்தை கம்ப்யூட்டர் வழியாக கண்காணிக்கலாம். ரெயிலின் வேகம் குறைப்பு மற்றும் ‘பிரேக்’ வசதி உள்ளிட்டவற்றை கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்தலாம்.

ரெயிலை வேகமாக இயக்கினாலும் ரெயிலில் உள்ள பயணிகளுக்கு எந்த விதமான சத்தமும் கேட்காது. ரெயில் எந்த இடத்தில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை பயணிகள் அறிந்துகொள்ள ரெயில் பெட்டிகளில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் ரெயில் தற்போது எந்த ரெயில் நிலையத்தில் நிற்கிறது? அடுத்து வரக்கூடிய ரெயில் நிலையம் எது? போன்ற விவரங்களை திரை வழியாகவும், ஒலி பெருக்கி மூலமாகவும் பயணிகள் அறிந்து கொள்ள முடியும். ரெயிலில், பெண்கள் பெட்டிகளில் அவர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரெயிலில், விமானத்தில் இருப்பதுபோல் தகவல்களை சேமிக்கும் கருப்பு பெட்டி இருப்பது முக்கிய சிறப்பம்சமாகும். இந்த மும்முனை மின்சார ரெயிலை இயக்குவதன் மூலம் 30 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும். நவீன வசதிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரெயிலில் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

இந்த அதிநவீன மின்சார ரெயிலை சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் வரை இயக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story