“நான் காகிதப்பூ அல்ல, விதை; விதைத்துப்பாருங்கள் முளைப்பேன்” மு.க. ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்


“நான் காகிதப்பூ அல்ல, விதை; விதைத்துப்பாருங்கள் முளைப்பேன்” மு.க. ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்
x
தினத்தந்தி 21 Feb 2018 4:45 AM IST (Updated: 21 Feb 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

“நான் காகிதப்பூ இல்லை. விதை. என்னை நுகர்ந்து பார்த்தால் மணம் இருக்காது. விதைத்துப் பாருங்கள். முளைப்பேன்“ என்று மு.க. ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

மதுரை,

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

அதன்படி, அவர் ராமேசுவரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று (புதன்கிழமை) தொடங்குகிறார். இதற்காக அவர் நேற்று இரவு 8.30 மணிக்கு ராமேசுவரம் வந்து சேர்ந்தார்.

இன்று காலை 7.30 மணிக்கு அப்துல்கலாம் இல்லத்துக்கு கமல்ஹாசன் செல்கிறார். அங்கு கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து அவரிடம் தனது அரசியல் பயணத்திற்காக ஆசி பெறுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, அப்துல்கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய 1-ம் நம்பர் நடுநிலைப்பள்ளிக்கு வருகிறார். அங்கு பள்ளிக் குழந்தைகளை சந்தித்து பேசுகிறார்.

தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு வருகிறார். அங்கு மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்.

அதன்பின்னர் காலை 11 மணிக்கு ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு கமல்ஹாசன் வருகிறார். அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி ராமநாதபுரம் வருகிறார். அங்கு அரண்மனை நுழைவாயில் முன்பு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதையடுத்து, பரமக்குடி ஐந்துமுனை சாலை, மானாமதுரை ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மாலை 6 மணிக்கு கமல்ஹாசன் மதுரை வருகிறார். இங்கு ஒத்தக்கடையில் அவர் பேசுவதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் கமல்ஹாசன், தனது கட்சியின் கொடி, சின்னம் மற்றும் கொள்கைகளை அறிவிக்கிறார்.

இரவு 8.10 மணி முதல் இரவு 9 மணி வரை அவர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

கமல்ஹாசனின் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவருடைய நற்பணி இயக்கத் தொண்டர்கள் செய்துள்ளனர்.

முன்னதாக, ராமேசுவரம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கமல்ஹாசன் நேற்று பகலில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் திரண்டு இருந்த தொண்டர்கள், கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். “முதல்-அமைச்சரே வருக“, “நாளைய தமிழகமே வருக“ என கோஷம் எழுப்பி வரவேற்றனர். அவர்களை நோக்கி கமல்ஹாசன் கையசைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, “எனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறேன். நாளை (இன்று) காலை ராமேசுவரத்தில் எனது அரசியல் பயணத்தை தொடங்குகிறேன். அங்கிருந்து பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரை வருகிறேன். நாளை (இன்று) இரவு மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கட்சியின் கொள்கைகளை விளக்குவேன். இந்த கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்“ என்றார்.

அப்போது நிருபர்கள், முதல் அரசியல் கூட்டத்தை மதுரையில் நடத்துவதற்கு என்ன காரணம் என்று கேட்டனர். அதற்கு கமல்ஹாசன், “மதுரையும் எனது ஊர் தான். யாதும் ஊரே, யாவரும் கேளிர்“ என்று பதிலளித்து விட்டு புறப்பட்டார்.

பிறகு அவர் தங்கம் கிராண்ட் ஓட்டலில் தங்கினார். அங்கு தங்கி விட்டு மாலையில் ராமேசுவரம் புறப்பட்டார். அப்போது கமல்ஹாசனை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அரசியலில் புதிதாக காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால் அது மணம் வீசாது என்று மு.க. ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே?

பதில்:- அவர் (ஸ்டாலின்) என்னை சொல்லி இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி சொல்லி இருந்தால், ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். நான் பூ இல்லை. விதை. என்னை நுகர்ந்து பார்த்தால் மணம் இருக்காது. விதைத்துப் பாருங்கள். முளைப்பேன்.

கேள்வி:- மதுரை பொதுக்கூட்டத்தில் யார்-யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள்?

பதில்:- கெஜ்ரிவால், பினராயி விஜயன் ஆகியோர் வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் வரவில்லை என்றால் மாற்று செய்வார்கள்.

கேள்வி:- கொள்கை ரீதியாக ஒத்துப்போகும்பட்சத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பேன் என்று சொல்லியும். ஸ்டாலின் காகிதப் பூ என்று சொல்லி இருக்கிறாரே?

பதில்:-நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் சொல்லவே இல்லையே? என் கொள்கையுடன் யார் ஒத்துப் போனாலும் கூட்டணி வைப்பேன் என்று தான் சொன்னேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story