தாண்டிக்குடியில் துணிகரம்: கூட்டுறவு வங்கி செயலாளர் வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை


தாண்டிக்குடியில் துணிகரம்: கூட்டுறவு வங்கி செயலாளர் வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 21 Feb 2018 3:15 AM IST (Updated: 21 Feb 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

தாண்டிக்குடியில் கூட்டுறவு வங்கி செயலாளர் வீட்டில் 25 பவுன் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரும்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 58). இவர் தாண்டிக்குடியில் உள்ள கூட்டுறவு வங்கியின் செயலாளராக உள்ளார். அவருடைய மனைவி சாந்தி (வயது 50). இவர்களுடைய மகள் காருண்யா (27). மகன் நாகராஜ் (21). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். காருண்யாவை வத்தலக்குண்டுவில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காருண்யா, பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காருண்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிரசவத்துக்காக வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையொட்டி இளங்கோவன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றார்.

நேற்று இளங்கோவன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

மேலும் பூஜை அறையில் வைத்திருந்த 25 பவுன் நகை மற்றும் அலமாரியில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தாண்டிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கைவிரல்ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்து கொண்டனர். திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிபோய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story