இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2018 4:45 AM IST (Updated: 21 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே தம்பி இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே உள்ள சொத்தவிளையை சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு அனிதா, அஜிதா, தேவிகா(வயது 22) ஆகிய 3 மகள்களும், நாகமுருகேஷ்(19) என்ற மகனும் இருந்தனர். நாகமுருகேஷ் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி நாகமுருகேஷ் தனது நண்பர்களுடன் சொத்தவிளை கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர்கள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். அப்போது, ராட்சத அலை மாணவர்களை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதில் நாகமுருகேசும், அவரது நண்பர் ஒருவரும் கடலில் மூழ்கி பலியானார்கள்.

நாகமுருகேஷ் கடலில் மூழ்கி பலியானது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் மீது பெற்றோரும், சகோதரிகளும் மிகுந்த பாசத்துடன் இருந்து வந்தனர்.

பட்ட படிப்பு முடித்து விட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தேவிகா, தம்பி மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்.

நாகமுருகேசின் இழப்பு ஏற்படுத்திய சோகத்தில் இருந்து தேவிகா மீள முடியாமல் தவித்து வந்தார். இதன்காரணமாக கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் அவர், வழக்கம்போல் எழுந்து வேலைக்கு செல்கிறேன் என்று வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். இதற்காக குளிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் அருகில் உள்ள ஒரு பழைய வீட்டில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர இறந்து விட்டதாக கூறினார்.

பின்னர், இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தம்பி இறந்த ஒரே மாதத்தில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story