மின்மாற்றியில் ஏற்படும் பழுதை 3 நாட்களில் நீக்காவிட்டால் அபராதம்


மின்மாற்றியில் ஏற்படும் பழுதை 3 நாட்களில் நீக்காவிட்டால் அபராதம்
x
தினத்தந்தி 21 Feb 2018 4:32 AM IST (Updated: 21 Feb 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மேல்–சபையில் நேற்று ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் டி.ஏ.‌ஷரவணா கேட்ட கேள்விக்கு மின்சாரத்துறை மந்திரி டி.கே. சிவக்குமார் பதிலளிக்கையில் கூறியதாவது:–

பெங்களூரு,

விவசாய பம்புசெட்டுகளுக்கு மின்சாரம் வழங்கும் மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) பழுதானால் 3 நாட்களுக்குள் பழுதை நீக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு 3 நாட்களுக்குள் பழுது நீக்காவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கர்நாடகத்தில் வறட்சி நிலை இருக்கின்றபோதும் கிராமப்புறங்களில் 7 மணி நேரம் வரை தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. வரும் நாட்களில் இதே போல் மின்சாரம் வழங்கப்படும்.

முன்பெல்லாம் மின்மாற்றிகள் பழுதானால் அவற்றை சரிசெய்ய மாதக்கணக்கில் ஆகும். இப்போது ஒவ்வொரு தாலுகாவிலும் மின்மாற்றி வங்கியை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது 120 தாலுகாக்களில் இத்தகைய வங்கியை அமைத்துள்ளோம். அதனால் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

அதிக மின்னழுத்த பாதையில் விவசாய பம்புசெட்டுகளுக்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஆகும் செலவில் 25 சதவீதத்தை விவசாயிகளே ஏற்க வேண்டும். மீதமுள்ள 75 சதவீதத்தை அரசு ஏற்கும். விரைவாக மின்சார இணைப்பு பெற விவசாயிகள் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும். 5 லட்சம் விவசாயிகள் முறையாக இணைப்பு பெறாமலேயே மின்சாரத்தை பயன்படுத்தி வந்தனர். இதை நாங்கள் கண்டுபிடித்து சரிசெய்துள்ளோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story