விலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது


விலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2018 5:18 AM IST (Updated: 21 Feb 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா காப்புக்காட்டில் விலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அணைக்கட்டு,

பள்ளிகொண்டா காப்புக்காட்டில் மர்ம நபர்கள் காட்டிற்கு தீ வைப்பதும், விலங்குகளை வேட்டையாடி வருவதாகவும் வேலூர் தலைமை வன பாதுகாவலர் தின்கர்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் தேஜாஸ்வி, உதவி வன பாதுகாவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உத்தரவின்பேரில், ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர் முரளிதரன், வனவர் பிரதீப்குமார், வனகாப்பாளர்கள் பலராமன், சதீஷ்குமார் ஆகியோர் நேற்று பள்ளிகொண்டா மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காப்புக்காட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். மற்ற 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து வனத்துறையினர் பிடிபட்ட 2 பேரையும் ஒடுகத்தூர் வன அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வெட்டுவாணத்தை அடுத்த கட்டுப்புடி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 35), பள்ளிகொண்டா போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த அகமத் (28) என்பதும், காட்டுக்கு தீ வைத்தது, விலங்குகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய அல்லேரிமலை கிராமத்தை சேர்ந்த குட்டிராஜா, பிரபு, புஷ்பராஜ், சந்தோஷ், ராஜாமணி ஆகிய 5 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story