தினமும் விளையாடினால் உடல், மனம் ஆரோக்கியம் அடையும் கலெக்டர் ராமன் பேச்சு


தினமும் விளையாடினால் உடல், மனம் ஆரோக்கியம் அடையும் கலெக்டர் ராமன் பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2018 5:24 AM IST (Updated: 21 Feb 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

தினமும் விளையாடினால் உடல், மனம் ஆரோக்கியம் அடையும் என்று விளையாட்டு விழாவில் கலெக்டர் ராமன் கூறினார்.

வேலூர்,

நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவில் 15 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நேரு யுவகேந்திரா சார்பில் இதுவரை ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது. தற்போது மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் 4 வழிகளில் சக்தி கிடைக்கிறது. அவை உணவு, மூச்சுக்காற்று, நல்ல எண்ணங்கள் மற்றும் விளையாட்டாகும். தற்போதைய வாழ்க்கை சூழலில் அனைவருக்கும் வேலைப்பளு அதிகமாக காணப்படுகிறது. வேளைப்பளுவுக்கு மத்தியிலும் அனைவரும் விளையாட்டுக்கென்று நேரத்தை ஒதுக்க வேண்டும். தினமும் விளையாடினால் உடல், மனம், ஆரோக்கியம் அடையும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.

சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் நமது நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு குறைந்த எண்ணிக்கையில் தான் பரிசுகள் பெறுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை விட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தான் அதிகளவு பரிசுகள், பதக்கம் பெறுகின்றனர்.

விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விளையாட்டிலும் பங்கேற்பது வாழ்க்கையில் வெற்றி பெற உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story