விவசாய குழு கூட்டங்களில் முடிவு செய்யப்படும் இடங்களில் தடுப்பணை, கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்படும் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்


விவசாய குழு கூட்டங்களில் முடிவு செய்யப்படும் இடங்களில் தடுப்பணை, கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்படும் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
x
தினத்தந்தி 22 Feb 2018 2:15 AM IST (Updated: 21 Feb 2018 6:34 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் விரும்பி முடிவு செய்யும் இடங்களில் தடுப்பணை, கசிவுநீர் குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், வருகிற 24–ந் தேதி(சனிக்கிழமை) வரை நடைபெற உள்ள மானாவாரி விவசாய குழு கூட்டங்களில், விவசாயிகள் விரும்பி முடிவு செய்யும் இடங்களில் தடுப்பணை, கசிவுநீர் குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

விவசாயக்குழு கூட்டம்

2018–19–ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில், நீடித்த மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தில் 2–ம் கட்டமாக 30 தொகுப்புகளில் உள்ள 30 ஆயிரம் எக்டர் பரப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக மானாவாரி விவசாயக்குழு கூட்டங்கள் வருகிற 24–ந் தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

 ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் உள்ள நாகம்பட்டி, கீழமுடிமண், எப்போதும்வென்றான், ஜெகவீரபாண்டியபுரம், சந்திரகிரி மற்றும் அக்கன்நாயக்கன்பட்டி தொகுப்புகளும், கயத்தார் வட்டாரத்தில் உள்ள குருமலை, கயத்தார், வானரமுட்டி, சோழபுரம், கடம்பூர் மற்றும் சொக்கலிங்கபுரம் தொகுப்புகளும், கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள இளம்புவனம், கீழஈரால், சிந்தலக்கரை, நக்கலமுத்தன்பட்டி, ஊத்துப்பட்டி, மற்றும் முடுக்குமீண்டான்பட்டி தொகுப்புகளும், விளாத்திகுளம் வட்டாரத்தில் சக்கம்மாள்புரம், மார்த்தாண்டம்பட்டி, அயன்பொம்மையாபுரம், படர்ந்தபுளி, அரியநாயகிபுரம், மற்றும் குளத்தூர் தொகுப்புகளும், புதூர் வட்டாரத்தில் நாகலாபுரம், ராமச்சந்திராபுரம், வெம்பூர், மெட்டில்பட்டி, முத்தம்மாள்புரம் மற்றும் தாப்பாத்தி ஆகிய இடங்களில் அன்றைய தினம் (சனிக்கிழமை) கூட்டம் நடைபெறும்.

தடுப்பணை, கசிவுநீர் குட்டை

இந்த கூட்டங்களில், அந்தந்த பகுதி மானாவாரி தொகுப்புகளில் உள்ள விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். தங்களது தொகுப்பில் உள்ள மானாவாரி நிலத்துக்கு தேவையான நீரை சேமிக்கும் விதமாக, எந்தெந்த பகுதியில் தடுப்பணை அல்லது கசிவு நீர்க்குட்டை அமைக்க வேண்டும் என்ற தேவையை விவாதித்து முடிவு செய்ய வேண்டும். விவசாயிகள் முடிவு செய்யும் இடங்களில் தடுப்பணை, கசிவுநீர் குட்டடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story