அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம்


அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2018 4:30 AM IST (Updated: 22 Feb 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று சென்னையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கோட்டை நோக்கி மறியல் போராட்டம் பிப்ரவரி 21-ந்தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜாக்டோ-ஜியோ சார்பில் தாஸ், மாயவன், மீனாட்சி சுந்தரம், தியாகராஜன், அன்பரசு உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடினார்கள். பின்னர் அவர்கள் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

பிறகு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மோசஸ், சுரேஷ், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் கோட்டை நோக்கி மறியல் செய்ய காலை 11.20 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை செல்லவிடாமல் தடுக்க போலீசார் இரும்பு வேலி அமைத்து இருந்தனர். இரும்பு வேலியை மீறி கோட்டை நோக்கி செல்ல முயன்ற 3 ஆயிரம் பேர்களை ஏற்கனவே தயாராக வைத்திருந்த பஸ்களில் கைது செய்து ஏற்றிச் சென்றனர். முன்னதாக மறியல் போராட்டத்தின் போது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது:-

மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமல்படுத்தும்போது 21 மாதங்கள் விட்டுப்போனது.

எனவே நிலுவையில் உள்ள 21 மாதங்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும். 2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்றனர். ஆனால் அமல்படுத்தவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த ரூ.20 ஆயிரம் கோடி என்னாவாயிற்று?. அரசு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்த பணியில் ஜாக்டோ- ஜியோ சார்பில் 50 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுகிறார்கள். விரைவில் உள்ளாட்சி மன்ற தேர்தல் வரஉள்ளது. அந்ததேர்தலிலும் நாங்கள் தான் பணியாற்ற உள்ளோம்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். தமிழக அரசு உடனே எங்களை அழைத்துப்பேச வேண்டும். பேசும் வரை தினமும் தொடர் மறியல் போராட்டம் தொடரும். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்க வில்லை என்றால், போராட்டம் வேறு விதமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story