கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்புக்கொடி போராட்டம்


கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்புக்கொடி போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2018 4:30 AM IST (Updated: 22 Feb 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதோடு, சுகாதார பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். கவர்னரின் இத்தகைய நடவடிக்கை மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாக உள்ளது என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி கவர்னர் செல்லும் மாவட்டங்களில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தார். நேற்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கவர்னர் கலந்து கொண்டார்.

இதையடுத்து திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடந்தது. கவர்னர் சுற்றுலா மாளிகையில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு நேற்று காலை 9.45 மணி அளவில் காரில் சென்றார். அப்போது, திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஜெயில்கார்னர் அருகே அவருக்கு கருப்புக்கொடி காட்ட தி.மு.க.வினர் திரண்டு இருந்தனர்.

இந்த போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கவர்னரின் கார் அந்த பகுதியை கடந்து சென்றபோது தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் கயிறு கட்டி தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தினார்கள். இந்த போராட்டத்தில் பங்கேற்ற கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில அரசு அதிகாரத்தில் தலையிடுவது போல கவர்னர் அவர்களே அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. இன்று இருக்கிற ஆட்சியாளர்கள், பல அமைச்சர்கள் கவர்னர் செய்ததை தவறு இல்லை என்கிறார்கள். காரணம் அவர்களுடைய பதவியை காப்பாற்றி கொள்வதற்காக தான்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்து இருந்தால் கவர்னர் ஆய்வு செய்து இருப்பாரா?. அவரால் செய்து இருக்க முடியுமா? என்பதை எண்ணி பார்க்க வேண்டும். தற்போது உள்ள அரசு எந்தவிதமான முன்னேற்ற பணிகளையும் செய்யாத காரணத்தால் கவர்னரையே மத்திய அரசு அனுப்பி இதுபோல் செய்ய சொல்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் தேர்தலில் நல்ல பெயர் எடுத்து ஆட்சிக்கு வர கவர்னரை தவறாக பயன்படுத்துகிறார்கள். இதனை எதிர்த்து தான் தி.மு.க. போராட்டம் நடத்தி இருக்கிறது. ஆனால் கவர்னர் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு பளிச்சென இருக்கிறது. அது தான் திருச்சி மக்களுக்கு கிடைத்து இருக்கிற நன்மை. இப்போது எந்த திட்டங்களும் நடைபெறவில்லை. அரசு முடங்கி கிடக்கிறது. அதனால் தான் கவர்னர் வெளியே கிளம்பி வருகிறார். இதை தி.மு.க. கண்டிக் கிறது.

இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏக்கள் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். கவர்னர் வருகையையொட்டி தி.மு.க.வினர் நடத்திய போராட்டம் காரணமாக திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story