டெல்லியைப்போல் தமிழகத்திலும் கமல்ஹாசன் மாற்றத்தை ஏற்படுத்துவார்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு


டெல்லியைப்போல் தமிழகத்திலும் கமல்ஹாசன் மாற்றத்தை ஏற்படுத்துவார்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
x
தினத்தந்தி 22 Feb 2018 5:00 AM IST (Updated: 22 Feb 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியைப்போல் தமிழகத்திலும் கமல்ஹாசன் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

மதுரை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொடக்க விழாவில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

கமல்ஹாசன் ஒரு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு பரிமாணங்களை கொண்டிருந்தார். ஆனால், இன்றைக்கு நிஜ கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். கட்சி தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமின்றி, தெளிவான தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளார். இதற்கு தைரியம் வேண்டும். கமல் தைரியமாக நாட்டில் உள்ள ஊழல் கட்சிகள், மதவாத கட்சிகள் மற்றும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.

நான் இதுவரை கமல்ஹாசனின் ரசிகனாக மட்டும் இருந்தேன். இன்று முதல் அவரை நிஜ கதாநாயகனாக ஏற்றுக்கொண்டேன். தமிழகத்தில் மாற்று அரசியலின் தலைவராக மிளிர உள்ளார். இப்படி ஒரு தலைவரை பெற்றுள்ள தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் இது வரை தி.மு.க., அ.தி.மு.க. என்ற 2 கட்சிகளை மட்டுமே பார்த்துள்ளனர்.

இவர்களுக்கு மாற்றான ஒரு அரசியல் கட்சி இதுவரை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், கமல்ஹாசனின் புதிய கட்சி தமிழக மக்களுக்கு தனி உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. ஊழல் கட்சிகளுக்கு எப்போதும் வாக்களிக்காதீர்கள். அதற்கு பதிலாக கமல்ஹாசனுக்கு ஓட்டு போடுங்கள். கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் சிறிய அளவில் ஆம்ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது.

ஒரே வருடத்தில் டெல்லி சட்டசபை தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. ஊழலற்ற ஆட்சி என்பது மட்டுமே எங்களது பிரசாரமாக இருந்தது. அதுபோன்ற ஒரு மாற்றம் தமிழகத்தில் நடக்கப்போகிறது என்பதை உணர்கிறேன். டெல்லி மக்களின் சாதனையை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்.

நாங்கள் டெல்லியில் 3 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறோம். மிகவும் நேர்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம். இதனால் நிறைய இடையூறுகளை சந்திக்கிறோம். ஆனால், மக்கள் பணியில் எங்களுக்கு எதுவும் தடையாக இல்லை. எங்களது அரசில் பணம் என்ற பேச்சுக்கு இடமில்லை. இது ஒரு மாதிரியான புரட்சியாகும். அரசு பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் என அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்ற மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை தூக்கி எறிந்து விட்டு கமல்ஹாசனுக்கு அதிகாரத்தை கொடுங்கள். ஊழலை விரும்பினால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு ஓட்டளியுங்கள். தரமான கல்வியை கொண்ட பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், தண்ணீர், ரோடுகள் வேண்டுமென்றால் கமலுக்கு ஓட்டளியுங்கள்.

டெல்லியை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கமல் வெற்றி பெறுமாறு தமிழக மக்கள் ஓட்டளித்து சாதனை படைப்பார்கள் என நம்புகிறேன். கமலின் அரசியல் பயணத்துக்கு மீண்டும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story