இனிமேல் நான் சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு ராமநாதபுரம் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு


இனிமேல் நான் சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு ராமநாதபுரம் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 22 Feb 2018 4:00 AM IST (Updated: 22 Feb 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

“இனிமேல் நான் சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு. என்னை பொத்திப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று ராமநாதபுரம் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் உணர்ச்சி பொங்க பேசினார்.

ராமநாதபுரம்,

ராமேசுவரத்தில் நேற்று காலை தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், பிற்பகல் 1 மணிக்கு ராமநாதபுரம் வந்தார். வழிநெடுகிலும் திரண்டிருந்த அவருடைய ரசிகர்கள், பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

பிறகு அவர், ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அரசியல் பயண முதல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்ற கமல்ஹாசன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், பொதுமக்களையும் பார்த்து கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்பு அவர் பேசியதாவது:-

“நான் இந்த ஊருக்கு 45 வருடம் கழித்து வருகிறேன். ஊர் கொஞ்சம் மாறி உள்ளது. ஆனால், என் மக்கள் அப்படியே இருக்கின்றனர். இங்கே எனது சித்தப்பா ஆரவாமுதன் இருந்தார். அதனால் நான் நினைத்துக்கொள்வேன். ராமநாதபுரத்தில் நமக்கு ஒரு வீடு இருக்கிறது எப்போதாவது போகலாம் என்று நினைப்பேன்.

ஆனால், இப்போது இங்கு பார்க்கும்போது எனக்கு ஒரு வீடு இல்லை. இந்த ஊரே என் வீடுதான். நான் உங்கள் ஒவ்வொருவரின் வீட்டுப்பிள்ளை.

நான் மதுரையில் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். உங்களின் அன்பை பார்த்து இங்கு சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. என்னை இதுவரை நீங்கள் சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள். நான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்று உங்களிடம் சொல்கிறேன். நான் இனிமேல் சினிமா நட்சத்திரம் இல்லை. நான் உங்கள் வீட்டு விளக்கு. என்னை பொத்திப்பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஏற்றி வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

இங்கு வரும்போது இந்த கூட்டத்தினைப் பார்க்கும்போது பதற்றமாக இருந்தது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று.

ஆனால், இங்கு வந்து மேடையில் இருந்து பார்க்கும்போது இந்த வாய்ப்பை நழுவ விடலாமா என்று தோன்றுகிறது. இந்த அன்பு வெள்ளத்தில் நீந்தத்தான் நான் வந்தேன். இனியும் நீச்சல் வெவ்வேறு இடத்தில் போடவேண்டி இருக்கிறது. இந்த வெள்ளம் தொடர வேண்டும். என்னை நீங்கள் வாழ்த்த வேண்டும்.

நான் முதலில் சொன்னதுபோல் இந்த விளக்கினை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.“

இவ்வாறு அவர் பேசினார்.

பின்பு அவர், ராமநாதபுரம் மன்னர் குமரன்சேதுபதி வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை மன்னர் குமரன்சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார் ஆகியோர் வரவேற்றனர். அவர்களின் இல்லத்தில் மதிய உணவு சாப்பிட்ட பின் அவர், தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு புறப்பட்டார்.

Next Story