தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க வேண்டும்


தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Feb 2018 3:30 AM IST (Updated: 22 Feb 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு முழுமையாக முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டாலும் அந்த ரெயில்களில் முன்பதிவு கிடைப்பது அரிதாகவே உள்ளது. பஸ் கட்டணம்அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் ரெயில்பயணத்தையை பலரும் விரும்புகின்றனர். இதனால் நெடுந்தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு கிடைப்பதற்கு மிகுந்த சிரமப்படவேண்டியுள்ளது. தென்மாவட்ட மக்கள் நெடுந்தூர ரெயில்களில் முன்பதிவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.

ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் 18-க்கும் மேற்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தாலும் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்வதற்கு அதிக பட்சமாக 3 பெட்டிகளே உள்ளன. இதனால் அந்த ரெயில்பெட்டிகளில் பெரும்பாலானோர் உட்காரக்கூட இடம் கிடைக்காமல் மிகுந்த சிரமப்படும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக பெண்களும், முதியவர்களும் முன்பதிவு இல்லாத ரெயில்பெட்டிகளில் பயணம் செய்வதற்கு பெரும் சிரமப்படுகின்றனர்.

பல சந்தர்ப்பங்களில் முன்பதிவு செய்யாதோர் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணம் செய்ய முயற்சிப்பதால் ரெயில்வே அதிகாரிகளுக்கும் அவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது. முன்பதிவு இல்லாத ரெயில்பெட்டிகளிலும் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு நிற்க வேண்டிய நிலை உள்ளதால் பயணிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் ரெயில்வேத்துறையின் டிக்கெட் பரிசோதகர்களும் முன்பதிவு இல்லாத ரெயில்பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே அதிகரித்து வரும் ரெயில் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு முழுமையான முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்குவது அவசியமாகும். உட்காரும் வசதி மட்டும் கொண்ட ரெயில்கள் இயக்கப்பட்டால் தென்மாவட்டங்களில் உள்ளோர் அதிகமாக பயன்பெறும் நிலை ஏற்படும். ரெயில்வேத்துறைக்கும் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

எனவே தெற்கு ரெயில்வே நிர்வாகம் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு உட்காரும் வசதி மட்டும் கொண்ட முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்களை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் முன்பதிவு இல்லாத ரெயில்கள் இயக்க வேண்டியதன் அவசியத்தை ரெயில்வே அமைச்சகத்திடமும், தெற்கு ரெயில்வே நிர்வாக அதிகாரிகளிடமும் வலியுறுத்தி இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம் ஆகும். 

Next Story