கிராம மக்களின் சட்டம் சாராத பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை


கிராம மக்களின் சட்டம் சாராத பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Feb 2018 3:15 AM IST (Updated: 22 Feb 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

கிராமங்களில் நடத்தப்படும் சட்ட விழிப்புணர்வு முகாம்களில் கிராம மக்களுக்கு ஏற்படும் சட்டம் சாராத பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என விருதுநகர் சார்பு நீதிபதியும் சட்டப்பணிகள் குழு தலைவருமான பத்மா தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே கன்னிச்சேரிபுதூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மக்கள் நல சேவை மைய துணைத்தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். முகாமில் வக்கீல்கள் பாண்டியராஜன், தானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். விருதுநகர் சார்பு நீதிபதியும், சட்டப்பணிக்குழு தலைவருமான பத்மா பேசியதாவது:-

பொதுமக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கிராமம் தோறும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கிராம மக்களுக்கு சட்டம் சார்ந்த சேவைகளை இலவசமாக வழங்குவதற்கு வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்காக வழக்குகளில் வாதாட ஏற்பாடு செய்யப்படுகிறது. சட்டம் சாராத பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் ஏற்பாடு செய்தல், கிராமங்களில் உள்ள சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட சேவைகளும் செய்து தரப்படுகிறது.

திருமண விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குடும்ப பெரியவர்களை வைத்து பேசியும் தீர்வு காண முடியாத நிலையில் சட்டப்பணிகள் குழு இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமரசம் செய்ய முயற்சி மேற்கொள் கிறது. இதனால் பல தம்பதியரிடையே கருத்துவேறுபாடு தவிர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக அனைவருக்கும் பொறுமையும், சகிப்பு தன்மையும் வேண்டும்.

கிராம மக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெறுவதற்கு சட்ட உதவிக்குழுவை நாடலாம். இவ்வாறு அவர் பேசினார். மக்கள் நீதிமன்ற உறுப்பினர் அழகுசுந்தரம் வரவேற்று பேசினார். மக்கள் நல சேவை மைய நிர்வாகிகளும், கிராம மக்களும் இதில் கலந்து கொண்டனர்.

Next Story