திருவாரூரில் 27-ந் தேதி சாலை மறியல்- கடையடைப்பு போராட்டம்


திருவாரூரில் 27-ந் தேதி சாலை மறியல்- கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2018 3:30 AM IST (Updated: 22 Feb 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர்-தஞ்சை நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி திருவாரூரில் வருகிற 27-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., வர்த்தக-சேவை அமைப்புகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர், அம்மையப்பன், கொரடாச்சேரி, நீடாமங்கலம் என சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை முற்றிலுமாக சேதமடைந்து அதிக விபத்துகள் நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினரிடம் முறையிட்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் வர்த்தகர் சங்கம், லாரி உரிமை யாளர் சங்கம், ஓட்டல் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வர்த்தக, சேவை அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திருவாரூர்-தஞ்சை பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவாரூரில் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப் பட்டது.

இதுகுறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் கூறுகையில், திருவாரூர்-தஞ்சை நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வருகிற 27-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் திருவாரூரே ஸ்தம்பிக்கும் வகையில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளோம். வர்த்தகர்கள் தாமாகவே முன்வந்து கடையடைப்பு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்றார்.

Next Story