ஒரே நேரத்தில் 3 வாகனங்கள் மோதியதில் ரோட்டை விட்டு தூக்கி வீசப்பட்ட கார்


ஒரே நேரத்தில் 3 வாகனங்கள் மோதியதில் ரோட்டை விட்டு தூக்கி வீசப்பட்ட கார்
x
தினத்தந்தி 22 Feb 2018 4:15 AM IST (Updated: 22 Feb 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

சித்தோடு-பெருந்துறை 4 வழிச்சாலையில் நேற்று ஒரே நேரத்தில் 3 வாகனங்கள் மோதியதில் ரோட்டை விட்டு கார் தூக்கி வீசப்பட்டது.

ஈரோடு,

சித்தோடு-பெருந்துறை 4 வழிச்சாலையில் பெருந்துறை அருகே உள்ள வாவிக்கடை பகுதியில் (சித்தோடு-பெருந்துறை ரோடு) தண்ணீர் லாரி மூலம் பணியாளர் ஒருவர் அரளி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியில் வேகமாக வந்த மினி லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரியில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மினிலாரி அதே இடத்தில் திரும்பி சாலையை அடைத்துக்கொண்டு நின்றது. அப்போது அதே வழியில் வந்த ஒரு கார் சற்றும் எதிர்பாராத வகையில் மினிலாரியில் மோதியது.

அதே வேகத்தில் கார் தூக்கி வீசப்பட்டது. 4 வழிச்சாலையில் இருந்து பறந்த மினிவேன் அருகில் உள்ள அணுகுசாலையையும் தாண்டி அந்தரத்தில் பறந்து சென்றது. சக்கரங்கள் தரையில் தொடாமலே சாலையோரத்தில் உள்ள பெட்ரோல் பங்கின் தரைமட்ட மதில்சுவர் பகுதியில் சிக்கியது. முன்பக்க டயர்களும் வெடித்தன. இதனால் அதற்கு மேல் நகர முடியாத வாகனம் அதிர்ஷ்டவசமாக அப்படியே நின்றது.

ஆனால் இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சித்தோடு சடையம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 44), அவருடைய மனைவி பூங்கொடி (34) ஆகியோர் காயம் அடைந்தனர். இதுபோல் மினி லாரியை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த துரைராஜ் என்பவருடைய மகன் சமுத்திரக்கனி (32) என்பவரும் காயம் அடைந்தார். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரும் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஒரே நேரத்தில் 3 வாகனங்கள் மோதிய இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பலத்த காயம் இல்லை. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணுகுசாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

4 வழிச்சாலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுவதற்காக நிறுத்தப்படும் தண்ணீர் லாரிகளால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன.

தண்ணீர் லாரி நடுரோட்டில் நிறுத்தப்பட்டு இருப்பதால் வேகமாக வரும் வாகனங்களுக்கு லாரி நின்று கொண்டிருப்பதாக தெரிவதில்லை. எனவே இதை தடுக்க சுமார் 50 மீட்டர் தூரத்தில் தற்காலிக தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்றும், தொடரும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Next Story