விருத்தாசலத்தில் முட்டிப்போட்டு மனுகொடுக்க வந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள்


விருத்தாசலத்தில் முட்டிப்போட்டு மனுகொடுக்க வந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 22 Feb 2018 4:30 AM IST (Updated: 23 Feb 2018 6:27 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் முட்டிப்போட்டு மனு கொடுக்க வந்த மாட்டு வண்டி தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் பகுதியில் உள்ள மணிமுக்தாறு மற்றும் வெள்ளாற்றில் பல்வேறு இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரிகள் இயங்கி வந்தது. இதன் மூலம் விருத்தாசலம் பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் மணிமுக்தாறு, வெள்ளாற்றில் இயங்கி வந்த மாட்டு வண்டி மணல் குவாரிகளை மாவட்ட நிர்வாகம் மூடியது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் அவர்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் மூடப்பட்ட மாட்டு வண்டி மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று அரசக்குழி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் வெற்றிவேல் தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள், மூடப்பட்ட மாட்டு வண்டி மணல் குவாரிகளை மீண்டும் திறக்க கோரி அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்காக அலுவலக முகப்பில் இருந்து முட்டிப்போட்டப்படி அலுவலகம் நோக்கி சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து தொழிலாளர்கள் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்ற கோட்டாட்சியர், அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story