சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை


சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 21 Feb 2018 11:59 PM GMT (Updated: 22 Feb 2018 12:30 AM GMT)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் முல்பாகல் பகுதியை சேர்ந்தவள் 15 வயது சிறுமி. இந்த சிறுமி பங்காருபேட்டை தாலுகா பூதுகோட்டையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தாள். இந்த நிலையில் அதேப்பகுதியை சேர்ந்த ஹரீஷ்(வயது 35) என்பவர் சிறுமியிடம் பழகி வந்து உள்ளார்.

மேலும் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின்பேரில் ஹரீசை முல்பாகல் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கோலார் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி நடந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி ரேகா தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ஹரீசுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதேப்போல கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா சிக்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 16-வயது சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி பக்கத்து வீட்டை சேர்ந்த நாராயணசாமி என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய், நாராயணசாமியிடம் கேட்டபோது அவரையும் தாக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பான வழக்கும் கோலார் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி ரேகா தீர்ப்பு அளித்தார். அதில் நாராயணசாமிக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா நாஞ்சிகுண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ்(30). இவர் வேலைக்கு பஸ்சில் சென்று வந்த போது அந்த பஸ்சில் பயணம் செய்த 15 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுமியை ஏமாற்றி பெங்களூருவுக்கு அழைத்து சென்ற சீனிவாஸ் அங்கு ஒரு வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இந்த சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி நடந்தது. இதுதொடர்பான வழக்கு கோலார் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் சீனிவாஸ் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நீதிபதி ரேகா தீர்ப்பு அளித்தார். அதில் சீனிவாசுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Next Story