கடினமாக உழைத்தால் கிராமப்புற பெண்களும் சாதிக்க முடியும்
கடின உழைப்பு இருந்தால், கிராமப்புற பெண்களும் சாதிக்க முடியும் என இந்திய வன சேவை பணிக்கு தேர்வான கார்த்திகேயனி தெரிவித்தார்.
கீரனூர்,
பழனி அருகே உள்ள வட்டமலைபுதூரை சேர்ந்தவர் கனகராஜ். விவசாயி. அவருடைய மனைவி ராதாமணி. இவர்களுடைய மகள்கள் கார்த்திகேயனி (வயது 23), கவுதமி (20), மகன் கனிஷ்வேல் (10). கவுதமி, சத்தியமங்கலத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். கனிஷ்வேல் வட்டமலைபுதூரில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறான்.
கார்த்திகேயனி 2017-ல் நடத்தப்பட்ட யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று, இந்திய வன சேவை பணிக்கு தேர்வாகி உள்ளார். தற்போது அவர், ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக சென்னையில் தங்கியிருந்து படித்து வருகிறார்.
இந்திய வனசேவை பணிக்கு தேர்வாகி இருப்பது குறித்து கார்த்திகேயனியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது கூறியதாவது:-
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவாகும். இதற்கிடையே இந்திய வன சேவை பணிக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி, ஐ.ஏ.எஸ். தேர்வில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த நம்பிக்கையுடன் வருகிற 26-ந்தேதி டெல்லியில் நடைபெறும் ஐ.ஏ.எஸ். தேர்வில் கலந்துகொள்வேன். வன சேவை பணிக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு இன்னும் வரவில்லை. அறிவிப்பு வந்ததும், அந்த பணியில் சேருவது குறித்து நான் முடிவு செய்வேன்.
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்பும் கிராமப்புற பெண்களுக்கு உங்களின் அறிவுரை என்ன என கேட்ட போது, கிராமப்புற பெண்கள் வெளியுலக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்கள், எந்த இலக்கை நோக்கி பயணிக்க விரும்புகின்றனரோ? அதை அடைய முடியும்.
மேலும் கடின உழைப்பும் அவசியம். கடின உழைப்பு இருந்தால் கிராமப்புற பெண்கள் எதிலும் சாதிக்க முடியும். எனது முயற்சிக்கு எனது பெற்றோரும், நண்பர்களும் உறுதுணையாக இருந்தனர் என்றார்.
Related Tags :
Next Story