மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடலாம் என கூறி எலுமிச்சை பழச்சாற்றை ஊசி மூலம் உடலில் செலுத்திய வியாபாரி


மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடலாம் என கூறி எலுமிச்சை பழச்சாற்றை ஊசி மூலம் உடலில் செலுத்திய வியாபாரி
x
தினத்தந்தி 23 Feb 2018 2:30 AM IST (Updated: 22 Feb 2018 8:08 PM IST)
t-max-icont-min-icon

மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடலாம் என கூறி எலுமிச்சை பழச்சாற்றை ஊசி மூலம் உடலில் செலுத்திய வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடலாம் என கூறி எலுமிச்சை பழச்சாற்றை ஊசி மூலம் உடலில் செலுத்திய வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வியாபாரி

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி என்ற திருப்பாரதி (வயது 55). வியாபாரியான இவர் எலுமிச்சை, நெல்லி, நார்த்தங்காய் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இவர் வந்தார். நுழைவு வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், எளிய முறையில் வைத்தியம் செய்ய கலெக்டரிடம் அனுமதி பெற வந்திருப்பதாக கூறினார்.

உடனே போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், திடீரென்று சிரிஞ்ச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு ஊசியை எடுத்தார். பின்னர் தான் கொண்டு வந்த ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதில் ஊசியை குத்தி சாறு எடுத்தார். மேலும் தனது 2 கைகளிலும் ஊசி மூலம் எலுமிச்சை பழச்சாற்றை செலுத்தினார். இதில் ஒரு கையில் ஊசி குத்தியபோது ரத்தம் வழிந்தது. உடனடியாக அவர் பையில் வைத்திருந்த வெற்றிலையில் வெண்ணெயை தடவி ஊசி குத்திய இடத்தில் ஒட்டி வைத்தார்.

காரணம் என்ன?

இதுகுறித்து திருப்பதி கூறுகையில், ‘‘இதுபோல் கடந்த சில நாட்களாக ஊசி போட்டு வருகிறேன். இதனால் எனக்கு இருந்த குறைந்த ரத்த அழுத்தம் சரியானது. மேலும் மதுப்பழக்கத்தில் இருந்தும் விடுபட்டுள்ளேன். எனவே, ஒவ்வொருவரும் 6 மாதத்துக்கு ஒரு முறை எலுமிச்சை சாறு எடுத்து ஊசி போட்டுக் கொண்டால் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடலாம். மற்ற நோய்களும் குணமாகும். இதுகுறித்து கலெக்டரிடம் கூறி, இந்த வைத்திய முறைக்கு அனுமதி பெறுவதற்காக வந்தேன்‘‘ என்று கூறினார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கலெக்டரை சந்திக்க முடியாமல் சிறிது நேரம் அங்கு நின்று விட்டு புறப்பட்டு சென்றார்.

அதிகாரி எச்சரிக்கை

இதுகுறித்து நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:–

ஊசி போடும் பணியை டாக்டர் அல்லது பயிற்சி பெற்ற செவிலியர் மட்டுமே செய்ய வேண்டும். அதுவும் டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது தவிர எலுமிச்சை பழச்சாறு போன்ற திரவங்களை ஊசி மூலம் நேரடியாக உடம்புக்குள் செலுத்தக்கூடாது. அது பக்க விளைவுகள் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, உயிரோடு விளையாடும் இதுபோன்ற செயல்களை யாரும் மேற்கொள்ளக்கூடாது. யாரேனும் இந்த செயலை தொடர்ந்து செய்தால் அவரை பிடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story