அரசு ஊழியர் குடியிருப்பு பூங்காவில் புதர்மண்டி கிடக்கும் அவலம்


அரசு ஊழியர் குடியிருப்பு பூங்காவில் புதர்மண்டி கிடக்கும் அவலம்
x
தினத்தந்தி 23 Feb 2018 4:15 AM IST (Updated: 23 Feb 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் அரசு ஊழியர் குடியிருப்பு பூங்காவில் புதர்மண்டி கிடக்கிறது. மேலும் சேதமடைந்த அடிபம்புகளை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திருச்சியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை வாடகையாக வசூல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக அந்த அடுக்குமாடி குடியிருப்பு பராமரிக்கப்படாததால் சில கட்டிடங்களில் சிமெண்டு பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் அச்சத்துடனேயே இருக்கின்றனர். இந்த குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டுள்ளது. சிலநேரங்களில் சாக்கடை நிரம்பி வழியும் போது அதனை குழாய் மூலம் அருகிலுள்ள துறைமங்கலம் ஏரியில் கலந்து விடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஏரிநீர் மாசடைவதோடு நோய் பரவவும் வாய்ப்பிருக்கிறது. எனவே திறந்தவெளியில் அல்லாமல் பாதாள சாக்கடை கழிவுநீர் முறையாக வெளியேற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், அரசு ஊழியர் குடியிருப்பில் வசிப்பவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவர்-சிறுமிகள் பொழுதுபோக்கிற்காகவும் அங்கு பூங்கா அமைக்கப்பட்டது. ஊஞ்சல், சீசா, சறுக்கு விளையாட்டு ஏணிகள் உள்ளிட்ட உபகரணங்கள் அங்கு வைக்கப்பட்டன. எனினும் இந்த பூங்கா பராமரிக்கப்படாததால் அங்கு முள்செடிகள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. விஷ ஜந்துக்களும் அங்கு தஞ்சமடைய ஆரம்பித்துவிட்டன. இதனால் நடைபயிற்சியை அந்த பூங்காவில் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து விட்டதால் அவையும் காட்சிபொருளாகவே இருக்கின்றன. எனவே பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 2017-ல் தண்ணீர் பிரச்சினையின் காரணமாக அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டதை மறந்துவிட முடியாது. அந்த வகையில், தற்போது கோடைகாலம் நெருங்குவதையொட்டி அங்கு பழுதடைந்துள்ள ஆழ்குழாய் கிணற்றை சீரமைக்க வேண்டும். நகராட்சி சார்பில் அங்கு குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் சில லட்சம் ரூபாய் செலவில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட அடிபம்புகள் சேதமடைந்து கேட்பாரற்று புதருக்குள் மறைந்து கிடக்கின்றன. எனவே இதனை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் கோடைகாலத்திற்கு உதவிகரமாக இருக்கும் என அரசு ஊழியர் குடியிருப்பு பெண்கள் தெரிவித்தனர். எனவே பெரம்பலூரில் சேதமடைந்த அரசு ஊழியர் குடியிருப்பு கட்டிடங்களை புனரமைப்பது உள்ளிட்டவற்றுக்காக சம்பந்தப்பட்ட துறை சார்பில் நிதி ஒதுக்கி விரைவில் பணிகள் தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story