கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடக்கம்


கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 23 Feb 2018 4:30 AM IST (Updated: 23 Feb 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தையொட்டி ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. இது, கும்மிடிப்பூண்டி சிப்காட், பாலகிருஷ்ணாபுரம், புது கும்மிடிப்பூண்டி உள்பட பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய ரெயில்வே கேட் ஆகும்.

ரெயில்வே நிர்வாகத்திற்கு ஏற்படும் நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு இந்த ரெயில்வே கேட் பல வருடங்களுக்கு முன்பே நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது.

இருப்பினும் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை ஆபத்தான முறையில் கடந்துதான் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர வாகனம் மூலமும், நடந்தும் மறுபுறம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சில சமயங்களில் இறந்து போனவர்களின் உடல்களை ரெயில்வே கேட்டில் குனிந்து எடுத்து செல்ல வேண்டிய அவல நிலையும் ஏற்படுகிறது.

ரெயில்வே கேட்டின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது கும்மிடிப்பூண்டி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனையடுத்து மூடப்பட்ட ரெயில்வே கேட்டை திறக்க இயலாத நிலையில் அதன் கீழ் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைத்திட ரெயில்வே நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த சுரங்கப்பாதை வழியாக இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் தடையின்றி செல்ல 37 மீட்டர் நீளம், 16 அடி அகலம் மற்றும் 10 அடி உயரத்திற்கு வழி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

சுரங்கப்பாதை அமைப்பதற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதாவது மேற்கண்ட ரெயில்வே கேட்டின் அருகே ரெடிமேட் சுரங்கப்பாதை அமைத்திட தேவையான சிமெண்டு கான்கீரிட் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.

ஆனால் நிர்வாக பிரச்சினை காரணமாக சுரங்கப்பாதை தொடர்பான அடுத்த கட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை பணி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

ரெயில்வே கேட்டையொட்டி ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ரெயில்வே நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களே முன்வந்து நேற்று (வியாழன்) ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்தனர்.

இந்த நிலையில், ரெயில்வே பாதையின் கீழ் சுரங்கம் அமைத்து தயார் நிலையில் உள்ள சிமெண்டு கான்கிரீட் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன.

இதற்காக வருகிற மார்ச் மாதம் 3, 4, 10 மற்றும் 11-ந் தேதிகளில் சில குறிப்பிட்ட ரெயில்கள் நிறுத்தப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதாக ரெயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதால் கும்மிடிப்பூண்டி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story