தனியார் பஸ்களை விட அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்


தனியார் பஸ்களை விட அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்
x
தினத்தந்தி 23 Feb 2018 3:45 AM IST (Updated: 23 Feb 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் தனியார் பஸ்களை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரிடம் ராஜபாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் கோரிக்கை மனு அளித்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தைச் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்காக தினமும் ராஜபாளையம் வந்து செல்கின்றனர். இதற்காக அவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பஸ் கட்டணத்தை அரசு கடுமையாக உயர்த்தியதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் கட்டண உயர்வு காரணமாக பஸ்களில் செல்வதை ஏழை மக்கள் முடிந்த அளவுக்கு தவிர்த்து வருகின்றனர்.

இதனிடையே ராஜபாளையத்தில் இருந்து புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் தனியார் பஸ்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கேட்டால் இது எல்.எஸ்.எஸ். பஸ் என்று கண்டக்டர்கள் கூறுகின்றனராம்.

ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பஸ்சில் ரூ.85 வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியார் பஸ்சில் ரூ.65 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் மக்கள் அரசு பஸ்கள் மீது பெரும் அதிருப்தியாகி உள்ளனர்.

இது குறித்து தங்களது தொகுதி எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனிடம் ஏழை மக்கள் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் அரசு போக்குவரத்துத் துறை கூடுதல் செயலர் டேவில்தாரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தார்.

அப்போது ராஜபாளையத்தில் இருந்து இயக்கப்படும் அரசு புறநகர் பஸ்களில் மதுரைக்கு செல்ல கட்டணம் ரூ.85 வசூலிக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களில் ரூ.65 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தனியாரை விட அரசு பஸ்களில் அதிக கட்டணம் பொதுமக்களிடம் வசூலிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். எனவே மாவட்ட போக்குவரத்து மேலாளரிடம் இது குறித்து விசாரித்து பொதுமக்களிடம் குறைவாக கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Next Story