அரசு பொதுத்தேர்வை 261 மையங்களில் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் கலெக்டர் ஆலோசனை


அரசு பொதுத்தேர்வை 261 மையங்களில் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 23 Feb 2018 4:15 AM IST (Updated: 23 Feb 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 1-ந் தேதி முதல் தொடங்க உள்ள அரசு பொதுத்தேர்வை 261 மையங்களில் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2, மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் 1-ந் தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் இந்த கல்வி ஆண்டில் முதன் முறையாக பிளஸ்-1 தேர்வும் அரசு பொதுத்தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வு வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதிவரை நடக்கிறது. பிளஸ்-1 தேர்வு மார்ச் 7-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ந் தேதிவரை நடக்கிறது. இந்த இரு பொதுத்தேர்வுகள் 113 தேர்வு மையங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வை 40,645 மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை 40,309 மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர்.

இதுபோல எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 16-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதிவரை நடக்கிறது. அதற்காக 148 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 45,306 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து கலெக்டர் ரோகிணி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வராஜ்(சங்ககிரி), தங்கவேல்(சேலம்), உதவி கலெக்டர்கள் ராம.துரைமுருகன், செல்வன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான 16 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்காக 23 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் அமைக்கப்பட்டு, இரட்டை பூட்டு முறையில் இரு காப்பாளர்கள் வீதம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் வினாத்தாள் அடங்கிய கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இக்காப்பகங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்படுவதுடன், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய கோரப்பட்டுள்ளது. ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தண்டனைப் பற்றிய சுவரொட்டி தேர்வு மையங்களில் ஒட்டப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கண்காணிப்புக்காக மாவட்ட தேர்வுக்குழுவும், காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story