உறுதி மொழிக்குழு பரிந்துரை செய்கிற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தலைவர் வலியுறுத்தல்


உறுதி மொழிக்குழு பரிந்துரை செய்கிற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தலைவர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Feb 2018 4:15 AM IST (Updated: 23 Feb 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு பரிந்துரை செய்கிற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் அதன் தலைவர் ராஜா வலியுறுத்தினார்.

நாமக்கல்,

தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக்குழு ஆய்வுக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஆசியா மரியம் வரவேற்று பேசினார். இக்கூட்டத்திற்கு அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள் குணசேகரன், துரை.சந்திரசேகரன் பெரியபுள்ளான் என்கிற செல்வம், பொன்முடி, மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ராஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த மக்களின் தேவைகளையும், மக்களுக்காக செய்யப்பட வேண்டிய பணிகளையும் சட்டமன்றத்தில் எடுத்துக்கூறி, அவற்றை நிறைவேற்றி கொடுக்கவேண்டும் என்று அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கிறோம். அவ்வகையான கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கின்ற அமைச்சர்கள், உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தால், அவை அரசின் உறுதிமொழிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளனவா? என்பதனை ஆய்வு செய்யும் வகையில் அமைக்க பெற்றதே இந்த அரசு உறுதிமொழிக்குழு ஆகும். சட்டபேரவையில் அமைச்சர்களால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால், மக்களின் தேவைகள் பூர்த்தியடையாது. ஆகவே, உறுதிமொழிகள் எந்த காரணங்களுக்காக நிறைவேற்றப்படவில்லை என்பதை ஆய்ந்து, இடர்பாடுகளை நீக்கும் வகையில் செயலாற்றவும், அரசுக்கு பரிந்துரை செய்யவும் இக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 43 அரசு உறுதிமொழிகள் குறித்து ஆய்வு செய்கின்றோம். இந்த உறுதிமொழிகள் குறித்து கலெக்டர் மூலம் பெறப்பட்ட பதில் அறிக்கைகளை தற்போது குழு ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரை செய்கின்ற பணிகளை விரைந்து முடித்து மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி தந்திட துறை அலுவலர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தொழில் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 43 மனுக்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பதிலுரைகள் பெறப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக்குழுவின் இணை செயலாளர் சுப்பிரமணியம், சார்பு செயலாளர் சுஜாதாதேவி, போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட வன அலுவலர் டாக்டர்.காஞ்சனா, திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி நன்றி கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாடு சட்டபேரவை அரசு உறுதி மொழிக்குழு நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டி புதூர் பகுதியில் புதிய பஸ்நிலையம் அமைப்பதற்காக உத்தேசித்துள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Next Story