‘பிக்பாஸ்’ அரங்கம் எரிந்து நாசம் பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்


‘பிக்பாஸ்’ அரங்கம் எரிந்து நாசம் பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 23 Feb 2018 5:05 AM IST (Updated: 23 Feb 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர் அருகே பொழுது போக்கு மையத்தில் நடந்த தீ விபத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி அரங்கம் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில், பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம் அடைந்தன.

ராமநகர்,

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதி அருகே ‘இன்னோவேடிவ் பிலிம் சிட்டி’ என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான பொழுது போக்கு மையம் உள்ளது. இங்கு தான் பிரபலமான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு பல கோடி ரூபாய் செலவில் வீடு போன்ற பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. முதல் 2 ஆண்டுகள் கன்னடத்தில் வெளியான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி புனேயில் தான் நடத்தப்பட்டன. அதன்பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ‘இன்னோவேடிவ் பிலிம் சிட்டி’யில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

சமீபத்தில் தான் 5-வது ஆண்டுக்கான ‘பிக்பாஸ்‘ நிகழ்ச்சி நடத்தப்பட்டு நிறைவு பெற்றது. இதற்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கை பெங்களூரு, ராமநகர் மாவட்ட மக்கள் கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் பொழுது போக்கு மையத்தில் உள்ள கட்டிடத்தில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அத்துடன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட அரங்குக்கும் தீ பரவி எரிந்தது. இதை பார்த்த அங்கிருந்த காவலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், பிடதி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்கள். உடனே போலீசார் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தார்கள். அவர்கள் அங்கு பிடித்து எரிந்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். ஆனால் தீ அணையாமல் எரிந்ததுடன், மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி எரிந்தது. இதனால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகையும் வெளியேறிய வண்ணம் இருந்தது.

இதையடுத்து, ராமநகர், சென்னப்பட்டணா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலும் 8 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தார்கள். அவர்கள் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன், அங்குள்ள மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமலும் பார்த்து கொண்டனர். 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு காலை 9 மணியளவில் அங்கு பிடித்து எரிந்த தீயை வீரர்கள் முற்றிலும் அணைத்தார்கள்.

ஆனாலும் தீ விபத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு இருந்த வீடு போன்ற பிரமாண்ட அரங்கு முற்றிலும் எரிந்து நாசமானது. அதுபோல, அங்கிருந்து ஏராளமான விலை உயர்ந்த பொருட்களும் தீயில் கருகி நாசமானது. தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் தீ விபத்திற்கு வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதிகாலை நேரம் என்பதால், அங்கு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் பிடதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ராமநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story