மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து ராகுல் காந்தி பேசுவார்


மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து ராகுல் காந்தி பேசுவார்
x
தினத்தந்தி 23 Feb 2018 5:11 AM IST (Updated: 23 Feb 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

2-வது கட்ட சுற்றுப் பயணத்தின்போது மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து ராகுல் காந்தி பேசுவார் என்று பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 2-வது கட்டமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை(சனிக்கிழமை) முதல் 3 நாட்கள் மும்பை-கர்நாடக பகுதியில் மக்கள் ஆசிர்வாத சுற்றுப்பயணம் செய்கிறார். பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, தார்வார் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கட்சி பிரசார பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் தலைவர்கள் இருப்பார்கள். இந்த பயணத்தின்போதும் கோவில்கள் மற்றும் மடங்களுக்கு ராகுல் காந்தி செல்வார். மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக ராகுல் காந்தி பேசுவார். சோமசேகர் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பற்றி எனக்கு தகவல் எதுவும் தெரியாது.

ராகுல் காந்தியை சிறுவன் என்று எடியூரப்பா தரம்தாழ்த்தி பேசி இருக்கிறார். எங்கள் கட்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள அவரை இவ்வாறு பேசுவது சரியல்ல. மூத்த அரசியல் தலைவராக இருக்கும் அவர் இவ்வாறு பேசுவது ஏற்கத்தக்கதல்ல. பட்டதாரி வாலிபரை தாக்கிய சம்பவத்தில் என்.ஏ.ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகன் முகமது ஹாரீஸ் நலபட்டை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்.

அதே போல் பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் கலாட்டா செய்த காங்கிரஸ் பிரமுகர் நாராயணசாமி மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுபோன்ற சம்பவங்களை எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் சகித்துக்கொள்ளாது. முகமது ஹாரீஸ் நலபட் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார். 

Next Story