தொடர் மோசடி நடவடிக்கைகளால் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை


தொடர் மோசடி நடவடிக்கைகளால் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை
x
தினத்தந்தி 24 Feb 2018 3:30 AM IST (Updated: 24 Feb 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

அரசு வங்கிகளில் தொடர் மோசடி நடவடிக்கைகளால் மக்கள் வங்கிகள் மீது நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் கூறினார்.

விருதுநகர்,

பிரதமர் மோடி பதவி ஏற்றவுடன் வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவோம் என்றும், கருப்பு பணத்தை ஒழிப்போம் என்றும், ஏழை மக்களின் வங்கிகணக்கில் பண முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவித்ததோடு, நாட்டு மக்கள் அனைவரும் வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனை நம்பி ஏழை-எளிய மக்களும் அரசு வங்கிகளில் சேமிப்பு கணக்குகளை தொடங்கினர். ஆனால் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புதொகை இருக்க வேண்டும் என்று கூறி வங்கிகள் குறைந்த இருப்பு தொகை உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்தநிலையில் அரசு வங்கிகளில் பெரும் தொழில் அதிபர்கள் கோடிக்கணக்கில் பண மோசடி செய்யும் நடவடிக்கைகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

விஜய்மல்லையாவை தொடர்ந்து, நிரவ் மோடி என்ற தொழில் அதிபர் அரசு வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரும் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்.

இதனைத்தொடர்ந்து மும்பையில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த தொழில் அதிபர் அவரின் மகனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பொதுமக்கள்வங்கிகள் மீது நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் அதிபர்களின் மோசடி குறித்து இதுவரை பிரதமர் மோடியோ, நிதி மந்திரி அருண்ஜெட்டிலியோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தப்பியோடிய தொழில் அதிபர்களை கைதுசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதுடன் மோசடி தொகையை மீட்கவும் உரியநடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பிரதமர் மோடி ஜெயலலிதா பிறந்தநாள்விழாவையொட்டி ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். தமிழகத்தை பொறுத்தமட்டில் அ.தி.மு.க. ஆட்சி என்பது பா.ஜனதாவின் பினாமி ஆட்சி தான் என்பது உறுதியாகிறது. துணை முதல்-அமைச்சர் பிரதமர் மோடியின் ஆலோசனையின்படி தான் அணிகள் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளதும் அ.தி.மு.க., பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்கிறது. தமிழகத்தில் இளைஞர் காங்கிரசில் தற்போது 2½ லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் வங்கிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்த வலியுறுத்தியும், மோசடி நடவடிக்கைகளை கண்டித்தும் மாநிலம் முழுவதும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

பேட்டியின் போது மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் செல்வக்குமார் உடன் இருந்தார்.

Next Story