பிரதமர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கவர்னர் கிரண்பெடி ஆய்வு


பிரதமர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கவர்னர் கிரண்பெடி ஆய்வு
x
தினத்தந்தி 24 Feb 2018 5:15 AM IST (Updated: 24 Feb 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கவர்னர் கிரண்பெடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை அரவிந்தர் ஆசிரமம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள லாஸ்பேட்டை மைதானம் முழுவதும் பாதுகாப்பு குழுவினரின் கட்டுப்பாட்டிற்குள் வரப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கவர்னர் கிரண்பெடி ஆகியோர் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமான நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்களுக்கு போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், டி.ஐ.ஜி.க்கள் ராஜீவ்ரஞ்சன், சந்திரன் ஆகியோர் விளக்கி கூறினார். விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்களை பிரதமர் நரேந்திரமோடி சந்திக்க உள்ள அறையையும் பார்வையிட்டனர். அதன்பின் கவர்னர் கிரண்பெடி அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அவருடன் பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஆய்வுப்பணியில் ஈடுபட்ட கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறுகையில், ‘பிரதமரை வரவேற்க புதுச்சேரி தயாராகிவிட்டது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி நிதிநிலை குறித்து பிரதமரிடம் முதல்-அமைச்சர் பேச உள்ளார். புதுவையில் வாரிய தலைவர்கள் நியமனத்தில் முன்னாள் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா விதிகளை திருத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவித்துள்ளேன்’ என்றார்.

Next Story