ஆரோவில் பொன்விழா, புதுவை பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி நாளை பங்கேற்கிறார்


ஆரோவில் பொன்விழா, புதுவை பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி நாளை பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 24 Feb 2018 5:00 AM IST (Updated: 24 Feb 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஆரோவில் பொன்விழா, புதுவை பொதுக்கூட்டத்தில் நாளை பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

வானூர்,

சர்வதேச நகரான ஆரோவில் உதயதின பொன்விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதற்காக அவர் நாளை புதுவை வருகிறார். இதையொட்டி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்துக்கு வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்கிறார். அங்கு தியானம் செய்யும் பிரதமர் பின்பு ஆரோவில்லுக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு பொன்விழாவில் கலந்துகொள்கிறார்.

அதன்பின் கார் மூலம் புதுவை லாஸ்பேட்டை மைதானத்துக்கு வருகிறார். அங்கு பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். பின்னர் அவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

ஆரோவில் உதயதின விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஆரோவில் பவுண்டேசன் சேர்மன் கரண்சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதையொட்டி மேடை, பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க டெல்லியில் இருந்து 50 அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து தமிழக-புதுச்சேரி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுக்கூட்டம் நடைபெறும் லாஸ்பேட்டை மைதானம் முழுவதும் பாதுகாப்பு குழுவினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மைதானத்துக்கு பந்தல் அமைக்கும் தொழிலாளர்கள் போலீசாரின் தீவிர சோதனைக்குப் பின்னரே பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர். பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை அருகில் உள்ள மக்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள 20 வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு குழுவிற்கு 7 பேர் வீதம் மொத்தம் 140 பேர் வந்துள்ளனர். இவர்கள் ஆரோவில் முழுவதும் அங்குலம், அங்குலமாக மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர ஆரோவில்லை சுற்றியுள்ள கோட்டக்குப்பம், குயிலாப்பாளையம், பெரிய முதலியார்சாவடி, இடையஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருவதோடு சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பிரதமர் மோடியின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மற்றும் ஆரோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் ஆரோவில் பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் தடுப்புக்கட்டைகள் அமைத்து அந்த வழியாக செல்வோரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story