வருகிற சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளுடன் கைகோர்க்க கம்யூனிஸ்டுகள் முடிவு


வருகிற சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளுடன் கைகோர்க்க கம்யூனிஸ்டுகள் முடிவு
x
தினத்தந்தி 24 Feb 2018 4:43 AM IST (Updated: 24 Feb 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவில் கடந்த 2004–ம் ஆண்டு வரை 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் 3–வது மிகப்பெரிய கட்சியாக வலம் வந்தன. ஆனால் தற்போது செல்வாக்கு சரிந்து கேரளா, திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களிலேயே அந்த கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது.

தேசிய அளவில் தங்களது கட்சியின் செல்வாக்கை மீட்க கம்யூனிஸ்டு கட்சிகள் போராடி வருகின்றன. இதற்காக மதசார்பற்ற கட்சிகளுடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்க கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய ஆட்சி மன்றக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

இதன் முன்னோட்டமாக கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளான காங்கிரஸ் அல்லது ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுடன் 2 கம்யூனிஸ்டுகளும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஜனதாதளம்(எஸ்) சார்பில் பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உள்ளது. மேலும் கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் கம்யூனிஸ்டு கட்சிகளையும் தங்களது பக்கம் இழுக்க அந்த கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது தங்கள் கட்சி செல்வாக்குடன் உள்ள பாகேபள்ளி, கே.ஆர்.புரம், மகாதேவபுரா, பீனியா தாசரஹள்ளி, பெங்களூரு தெற்கு, ஆனேக்கல் உள்ளிட்ட 26 தொகுதிகளில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விருப்பம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளி தொகுதியில் போட்டியிட அந்த கட்சியின் மாநில செயலாளர் ஸ்ரீராம ரெட்டி விருப்பம் தெரிவித்து உள்ளார். இவர் 1994, 2004–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இங்கு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனார் குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும்பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட இந்திய கம்யூனிஸ்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கட்சி சார்பில் ராஜாஜி நகர், மல்லேசுவரம் உள்ளிட்ட 15 தொகுதிகள் கேட்டு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story